மயான நிலத்தை மீட்க கோரியவருக்கு ரூ.1 லட்சம் வழங்க அரசுக்கு உத்தரவு
மயான நிலத்தை மீட்க கோரியவருக்கு ரூ.1 லட்சம் வழங்க அரசுக்கு உத்தரவு
ADDED : ஜூலை 28, 2024 12:37 AM
சென்னை:மயான நிலத்தை பராமரிக்க கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு, ஒரு லட்சம் ரூபாய் வழங்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த தொகையை கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அதிகாரியிடம் வசூலித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்து உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா, மருதண்டபள்ளி கிராமத்தில், 25 சென்ட் நிலம், 'மராத்தா' சமூகத்தினருக்காக 1965ல் ஒதுக்கப்பட்டது.
மராத்தா சமூகத்தினர் இறந்தால், அவர்களது உடலை புதைப்பதற்காக, இந்த இடம் ஒதுக்கப்பட்டது. உதவி செட்டில்மென்ட் அதிகாரி இதற்கான அறிவிப்பை 1965ல் வெளியிட்டார். இந்த நிலத்தில், சிலர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக, அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
இதையடுத்து, தன் மனுவை பரிசீலித்து, 25 சென்ட் நிலத்தையும் மயானமாக பராமரிக்கக்கோரி, உயர் நீதிமன்றத்தில், சீனிவாச ராவ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கும்படி, கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அதிகாரிக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 50 மீட்டருக்குள் வீடுகள் இருப்பதால், உடலை புதைக்கும் இடமாக பயன்படுத்த முடியாது எனக்கூறி மனுவை நிராகரித்து, மாவட்ட வருவாய் அதிகாரி உத்தரவிட்டார்.
நிராகரித்தது சரியே
இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை, தனி நீதிபதி விசாரித்தார். சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், மனுவை நிராகரித்தது சரிதான் என்று, தனி நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து, சீனிவாச ராவ் மேல்முறையீடு செய்தார்.
மனுவை, நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஆர்.பரத்குமார் ஆஜரானார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பஞ்சாயத்து விதிகளை, மாவட்ட வருவாய் அதிகாரி தவறாக புரிந்து கொண்டுள்ளார். இந்த வழக்கை பொறுத்தவரை, 1965ல் அந்த நிலத்தில் மயானம் இருந்தது என்பதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளன.
கடந்த, 2015ல் கூட, மயானமாக பயன்படுத்தப் பட்டுள்ளது. 50 மீட்டருக்குள் வீடுகள் இருப்பதால், மயானப்பகுதியாக அறிவிக்க முடியாது என மாவட்ட வருவாய் அதிகாரி முடிவு செய்தது சரியல்ல.
ஏற்கனவே மயானமாக அறிவிக்கப்பட்ட பகுதியை அப்படியே பராமரிப்பது குறித்த மனு மீது தான், அவர் முடிவெடுக்க வேண்டும். புதிய இடத்தை மயானமாக அறிவிக்கும்படி, மனுதாரர் கோரவில்லை.
கிராம நிர்வாக அதிகாரி, சூளகிரி தாசில்தார் ஆகியோர், குறிப்பிட்ட நிலம் மயானமாக பயன்படுத்தப்படுகிறது என்பதை உறுதி செய்திருப்பதை, டி.ஆர்.ஓ.,வின் உத்தரவில் பார்க்கலாம்.
சட்டம் - ஒழுங்கு பிரச்னையை காட்டி, ஆக்கிரமிப்பாளர்களின் உரிமையை உறுதி செய்தால், தவறான முன்னுதாரணமாகி விடும். விசாரணை வரம்பை கடந்து சென்றது மட்டுமல்லாமல், செட்டில் மென்ட் அதிகாரியின் உத்தரவையும், டி.ஆர்.ஓ., தவறாக புரிந்துள்ளார்.
டி.ஆர்.ஓ.,வின் முடிவை ஏற்க முடியாது. தனி நீதிபதி மற்றும் டி.ஆர்.ஓ.,வின் உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன. 25 சென்ட் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை, ஆறு மாதங்களுக்குள் அகற்ற வேண்டும்.
செட்டில்மென்ட் அதிகாரியின் உத்தரவை நிறைவேற்றத் தவறியது, இவ்வளவு நீண்ட கால வழக்குக்கு வழிவகுத்து உள்ளது.
அலைந்துள்ளார்
நீண்டகால வழக்கால், அந்த இடத்தில் புதைக்கப்பட்ட ஆன்மாக்கள் கூட கஷ்டப்பட்டிருக்கும். 7 ஆண்டுகளாக, நீதிமன்றத்துக்கு மனுதாரர் அலைந்துள்ளார். அவருக்கு வழக்கு செலவுத்தொகையை அரசு வழங்க வேண்டும்.
எனவே, 4 வாரங்களுக்குள் ஒரு லட்சம் ரூபாயை, அரசு வழங்க வேண்டும். அரசு விரும்பினால், அந்த தொகையை டி.ஆர்.ஓ.,வின் சம்பளத்தில் இருந்து வசூலித்துக் கொள்ளலாம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

