காவிரி கரையோர மாவட்டங்களில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை
காவிரி கரையோர மாவட்டங்களில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை
ADDED : ஆக 03, 2024 12:48 AM
சென்னை:முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு, சென்னை எழிலகம் கட்டடத்தில் உள்ள, மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். காவிரி கரையோர மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அம்மாவட்ட கலெக்டர்களிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார்.
வயநாட்டில் முகாமிட்டுள்ள தமிழக அதிகாரிகள் உடனும் பேசினார். அப்போது, அமைச்சர்கள் வேலு, ராமச்சந்திரன், தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.
முதல்வர் ஆய்வுக்குப் பின், தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா அளித்த பேட்டி:
காவிரி ஆற்றில், 1.50 லட்சம் கன அடி தண்ணீர், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ளது. ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலுார் மாவட்ட கலெக்டர்களுடன், நேரடியாக முதல்வர், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே பேசி விபரம் கேட்டறிந்தார்.
கரூர், நாமக்கல், ஈரோடு, தஞ்சாவூர் மாவட்டங்களில், 26 முகாம்களில், 1,571 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலுார் மாவட்டங்களில், தண்ணீர் வர வாய்ப்புள்ள பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் கால்நடைகள், பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று ஆடிப்பெருக்கையொட்டி, மக்கள் காவிரி ஆற்றுக்கு செல்வர். அங்கு, எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல், விழாவைக் கொண்டாட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இந்த ஆண்டு பேரிடர், வெள்ளம் வந்தால் சமாளிக்க, முன்னெச்சரிக்கையாக, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மின்சாரம் தடைபடாமல் இருக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.