ADDED : மே 01, 2024 11:21 PM
சென்னை:'ஏற்காடு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அரசு நிவாரண உதவிகள், தேர்தல் கமிஷன் அனுமதி பெற்று வழங்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப் பகுதியில், நேற்று முன்தினம் மாலை தனியார் பஸ், நிலை தடுமாறி, 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில், ஆறு பேர் இறந்துள்ளனர்.
அவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய்; பலத்த காயமடைந்தோருக்கு, 2 லட்சம்; சிறு காயமடைந்தோருக்கு 50,000 ரூபாய், அரசு சார்பில் நிதியுதவியாக வழங்க வேண்டும்.
காயமடைந்தவர்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
இதேபோல், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஏற்காடு விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், உடனடியாக மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு, மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தினேன். காயமடைந்தவர்களுக்கு தேவையான, அனைத்து உயிர் காப்பு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்ய உத்தரவிட்டேன்.
விபத்தில், உற்றாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அரசு நிவாரண உதவிகள், தேர்தல் கமிஷன் அனுமதி பெற்று வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

