ADDED : ஏப் 07, 2024 11:24 PM

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்தவர் ஜெயபாலன், 47; வெண்ணந்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முதுகலை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு, லோக்சபா தேர்தலில், ஓட்டுச்சாவடி அலுவலராக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
நேற்று ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, சேந்தமங்கலம் அக்கியம்பட்டி தனியார் பள்ளியில், 2ம் கட்ட பயிற்சி நடந்தது. அதில், பங்கேற்றுவிட்டு மாலை, 4:45 மணிக்கு, நாமக்கல் நோக்கி தன், 'ஹோண்டா' டூ - வீலரில் ஜெயபாலன் சென்றார்.
வேட்டாம்பாடி அருகே சென்றபோது, மண் சறுக்கி கீழே விழுந்ததில், தலையில் அணிந்திருந்த 'ஹெல்மெட்' கழன்று ஓடியது. அப்போது, சேந்தமங்கலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த அரசு பஸ்சின் பின் சக்கரம் ஜெயபாலன் மீது ஏறியதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நாமக்கல் போலீசார், உடலை மீட்டு விசாரிக்கின்றனர். கலெக்டர் உமா, இறந்த ஜெயபாலனின் உறவினர்களுக்கு நேரில் ஆறுதல் கூறினார்.

