கிராம வரைபடம் விற்பனை: தனியாருக்கு அரசு எச்சரிக்கை
கிராம வரைபடம் விற்பனை: தனியாருக்கு அரசு எச்சரிக்கை
ADDED : மே 06, 2024 12:45 AM
சென்னை: நில அளவைத்துறை தயாரித்த கிராம வரைபடங்களை, குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்கள் விற்பது, பொதுமக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நிலங்களின் எல்லை, பரப்பளவு தொடர்பான விபரங்களை, பாரம்பரியமாக நில அளவைத்துறை பராமரித்து வருகிறது.
இதில், சர்வே எண் வாரியாகவும், கிராமம், குறுவட்டம், தாலுகா வாரியாகவும், நில வரைபடங்கள் தயாரிக்கப்படுகின்றன. புதிதாக சொத்து வாங்குவோர், அந்த நிலம் சம்பந்தப்பட்ட கிராம வரைபடத்தில், எந்த வகையில் உள்ளது என்று பார்ப்பது அவசியம்.
இதற்காக, சென்னையில் உள்ள நில அளவைத்துறை தலைமையகம் மற்றும் மாவட்ட அலுவலகங்களில், வரைபடங்கள் விற்கப்பட்டு வந்தன. பொதுமக்கள் உரிய கட்டணம் செலுத்தி வரைபடங்களை பெற்று வந்தனர்.
இந்நிலையில், நில அளவை துறை, ஆன்லைன் முறையில் கிராம வரைபடங்கள் விற்கும் திட்டத்தை, சில ஆண்டுகளுக்கு முன் துவக்கியது. இதை, நில அளவைத்துறையின், https://tnlandsurvey.tn.gov.in/ என்ற இணையதளத்தில் கட்டணம் செலுத்தி பெறலாம்.
இந்தச் சேவையை பொது மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், சில இடங்களில் தனியார் நிறுவனங்கள் கிராம வரைபடங்களை விற்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, நில அளவைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நில அளவை துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே, கிராம வரைபடங்கள் விற்கப்படுகின்றன. இந்த வரைபடங்களை விற்க, தனியார் நிறுவனங்கள் எதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
ஆனால், தனியார் சிலர், எங்கள் துறை இணையதளத்தில் இருந்து வரைபடங்களை பிரதி எடுத்து, அதிக விலைக்கு விற்பதாக கூறப்படுகிறது.
இதுபோன்ற செயல்களில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் கிராம வரைபடங்கள் தேவைப்பட்டால், எங்கள் துறை இணையதளத்தை அணுகலாம். அரசு நிர்ணயித்த கட்டணத்தில் வரைபடங்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.