ADDED : பிப் 22, 2025 12:59 AM

சென்னை:போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்று எட்டு மாதங்களாகியும், பணியாணை வழங்காததை கண்டித்து, பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள் மட்டுமே, அரசு பள்ளிகளில் சேர முடியும் என்ற உத்தரவு உள்ளதால், 2012,- 2013, 2017 மற்றும், 2019ம் ஆண்டுகளில், ஆசிரியர் தேர்வாணையத்தின் வாயிலாக, 'டெட்' என்ற தகுதித்தேர்வு நடத்தப்பட்டது.
பின், அதில் தேர்ச்சி பெற்றோர் அதிகரித்ததால், 2023 அக்., 25ம் தேதி நியமன தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. அதில், 40,000 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
கடந்த, 2024 மே மாதம் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, ஜூலையில், 2,800 பேர் அடங்கிய உத்தேச தேர்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டது. இருப்பினும், இதுவரை கலந்தாய்வோ, பணி நியமன ஆணைகளோ வழங்கப்படவில்லை.
அதனால் விரக்திஅடைந்த, 1,000க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள், தங்கள் குடும்பத்துடன், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன், முகத்தில் முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் முகமூடியை அணிந்து, கையில் புத்தகங்களுடன் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வழங்காத, தி.மு.க., அரசின் மெத்தனப்போக்கை, பா.ம.க., தலைவர் அன்புமணி உள்ளிட்டோரும் கண்டித்துள்ளனர்.

