குரூப் 1 தேர்வு முறைகேடு வழக்கு 6 மாதத்தில் முடிக்கும்படி கண்டிப்பு
குரூப் 1 தேர்வு முறைகேடு வழக்கு 6 மாதத்தில் முடிக்கும்படி கண்டிப்பு
ADDED : ஆக 30, 2024 11:02 PM
சென்னை:'குரூப் 1' தேர்வு முறைகேடு வழக்கு விசாரணையை, ஆறு மாதத்தில் முடிக்குமாறு, சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., என்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யம், 2016ல் குரூப் -1 தேர்வை நடத்தியது. அதில், முறைகேடு நடந்ததாக, ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதையடுத்து, டி.என்.பி.எஸ்.சி., துணை செயலர் சங்கரசுப்பு என்பவர், மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
முறைகேடு புகாரில், மதுரையை சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, மேலும் சிலர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதில், இரண்டாவதாக குற்றம்சாட்டப்பட்ட கருணாநிதி என்பவர், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி சேஷசாயி விசாரித்தார்.
அப்போது, '2016ல் நடந்த குருப்- 1 தேர்வில் விடைத்தாளை மாற்றி மோசடி செய்த வழக்கில், இதுவரை 65 சாட்சிகள் சேர்க்கப்பட்டு, 10 பேரிடம் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. எனவே, வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை ஏற்கக்கூடாது' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி, ஆறு மாதத்துக்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என, சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார். வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை முடித்து வைத்தார்.