கோவில்களுக்கு ஜி.எஸ்.டி., விதிப்பு: வருமானம் அடிப்படையில் வசூல்
கோவில்களுக்கு ஜி.எஸ்.டி., விதிப்பு: வருமானம் அடிப்படையில் வசூல்
UPDATED : மார் 09, 2025 05:14 AM
ADDED : மார் 09, 2025 02:32 AM

மதுரை: ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள, வருவாய் வரக்கூடிய கோவில்களுக்கும், ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை செலுத்தாத கட்டணத்தையும், அபராதத்தையும் சேர்த்து, பல கோடி ரூபாய் வரி செலுத்த, ஜி.எஸ்.டி., மற்றும் மத்திய கலால் வரித்துறை தெரிவித்து உள்ளது.
அறநிலையத் துறையின்கீழ் அதிக வருவாய் வரும் 1,000க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி., 2017ல் அறிமுகமானது.
அப்போது, கோவில்கள் மதம் தொடர்பானவை என்பதாலும், மக்களுக்கு சேவை செய்து வருவதாலும் விலக்கு அளிக்கப்பட்டது. கடந்தாண்டு ஜி.எஸ்.டி., வசூலிப்பில் சில மாற்றம் செய்யப்பட்டது.
குறிப்பாக குத்தகைதாரரிடமிருந்து பெறப்பட்ட வாடகை வருமானத்தில் உரிமையாளர், 18 சதவீதம் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும்.
இதன் அடிப்படையில், கோவில்களும் ஜி.எஸ்.டி., வரி செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவில்களில் பிரசாதம், தரிசனக் கட்டணம், தங்கும் விடுதி போன்றவை வருமானம் வரக்கூடியவை.
இதை சேவையாக செய்து வருவதாக கோவில் நிர்வாகம் கூறினாலும், அது சந்தை மதிப்புடன் ஒப்பிடும்போது ஒரே மாதிரியான கட்டணம், விலை என்பதால், ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தவிர, சில முக்கிய கோவில்களுக்கு, பல கோடி மதிப்புள்ள நிலங்கள் பல்வேறு இடங்களில் உள்ளன. பல ஏக்கர்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.
இவற்றால் கோவில் நிர்வாகங்கள் வருவாய் ஈட்டுவதால், அதற்கும் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும்.
ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்தப்பட்ட 2017 முதல், இதுவரை எந்த வரியும் செலுத்தாததால், எட்டு ஆண்டுகளில் செலுத்த வேண்டிய வரி, அதற்கான அபராதம் என, ஒவ்வொரு கோவிலுக்கும் பல லட்சம் முதல் பல கோடி ரூபாய் வரை வரி நிர்ணயித்து நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்துள்ள அறநிலையத்துறை, 'பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை அடிப்படையிலும், மதரீதியாகவும் செயல்படக்கூடியது கோவில். வணிகநோக்கத்துடன் செயல்படவில்லை' என, ஜி.எஸ்.டி., அதிகாரிகளிடம் விளக்குவது குறித்து ஆலோசித்து வருகிறது.