தென்னந்தோப்பில் சிக்கிய துப்பாக்கி, தோட்டாக்கள்; வனத்துறையினர் பறிமுதல்
தென்னந்தோப்பில் சிக்கிய துப்பாக்கி, தோட்டாக்கள்; வனத்துறையினர் பறிமுதல்
ADDED : ஜூலை 22, 2024 12:45 AM
கூடலுார் : தேனி மாவட்டம் குள்ளப்பக்கவுண்டன்பட்டியில் காசி விஸ்வநாதன் தென்னந்தோப்பில் மறைத்து வைக்கப்பட்ட நாட்டு துப்பாக்கி, தோட்டாக்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். அங்கு துப்பாக்கியை பதுக்கியது யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.
குள்ளப்பக்கவுண்டன்பட்டி, வட்டப்பாறை, பூதகரடு பகுதியில் அப்பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரிக்கு தென்னந்தோப்பு உள்ளது. வனப்பகுதியை ஒட்டி இத்தோப்பு அமைந்துள்ளதால் இரவு நேரங்களில் காட்டு யானைகள் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்துவதாக புகார் எழுந்தது.
அதனடிப்படையில் வனவர் ஜெய்கணேஷ், வனக்காப்பாளர்கள் பொன்னழகர், ரகு ஆகியோர் தோப்பை பார்வையிட சென்றனர்.
அப்போது அருகிலுள்ள காசிவிஸ்வநாதன் என்பவர் தென்னந்தோப்பில் துப்பாக்கி, தோட்டாக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு வனத்துறையினர் சோதனை செய்த போது டயர் டியூப்பிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒற்றைக் குழல் நாட்டுத் துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் கூடலுார் தெற்கு போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சட்ட விரோதமாக அங்கு துப்பாக்கி பதுக்கி வைத்தது யார் என விசாரிக்கின்றனர்.

