குட்கா வழக்கு விசாரணை சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம்
குட்கா வழக்கு விசாரணை சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம்
ADDED : ஜூலை 09, 2024 06:31 AM

சென்னை : குட்கா ஊழல் வழக்கை, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி, சென்னை சி.பி.ஐ., நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுதும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்க, லஞ்சமாக பணம் பெற்றதாக புகார் எழுந்தது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த இந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ., முதலில் கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால் துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவகுமார் ஆகிய ஆறு பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து, 2021ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
வழக்கு விசாரணை, சென்னை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா, முன்னாள் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் உட்பட, மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு எதிராக, சி.பி.ஐ., கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் இவ்வழக்கு, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.எழில்வளவன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கில் முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளதால், வழக்கு விசாரணையை, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும், சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி, நீதிபதி உத்தரவிட்டார்.

