ADDED : ஆக 28, 2024 11:33 PM
சென்னை:ஓடும் ரயிலில், ஐ.டி., பெண் ஊழியரை, கழிப்பறையில் தள்ளி, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட, மூன்று வாலிபர்களை பிடிக்க, நான்கு டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து, கடந்த 26ம் தேதி சென்னை நோக்கி சென்ற விரைவு ரயிலில், கரூர் ரயில் நிலையத்தில், பெண் ஐ.டி., ஊழியர் ஒருவர் ஏறினார். ரயில் வேலுார் அடுத்த காட்பாடி பகுதியை கடந்தபோது, ஐ.டி.,பெண் ஊழியரிடம் இருந்த மொபைல் போனை, அதே ரயிலில் பயணித்த வாலிபர் ஒருவர் பறித்துக் கொண்டு ஓடியுள்ளார்.
அவரை விரட்டி சென்ற ஐ.டி., பெண் ஊழியரை, அந்த நபர் மேலும் இருவருடன் இணைந்து, ரயில் கழிப்பறைக்குள் தள்ளி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் கூறிய தகவல் அடிப்படையில், ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில், சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். தப்பி ஓடிய மூன்று பேரை பிடிக்க, நான்கு டி.எஸ்.பி.,க்கள் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனிப்படையிலும், 20 போலீசார் இடம் பெற்றுள்ளனர்.