ADDED : மார் 02, 2025 01:42 AM

அரியலுார் : அரியலுார் ரயில் நிலையத்தில், பயணி ஒருவரிடம் கணக்கில் காட்டப்படாத, 77.11 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் சிக்கியது.
அரியலுார் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார், பயணியரிடம் சோதனை செய்தனர்.
அப்போது, பயணி ஒருவரை விசாரித்ததில், அவர், பெரம்பலுார் மாவட்டம், மேலமாத்துாரைச் சேர்ந்த வினோத்குமார், 28, என, தெரியவந்தது.
அவர், முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதையடுத்து, பாதுகாப்பு படையினர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று, அவரிடமிருந்த பையை சோதனை செய்தனர். அதில், உரிய ஆவணங்கள் இன்றி, 77 லட்சத்து, 11,640 ரூபாய் ரொக்கப்பணம் இருந்தது தெரியவந்தது.
பணத்தை பறிமுதல் செய்த, ரயில்வே பாதுகாப்பு படையினர், திருச்சி வருமான வரித்துறை டி.எஸ்.பி., சுவேதா வசம் பணம் மற்றும் வினோத்குமாரை ஒப்படைத்தனர். திருச்சி வருமான வரித்துறையினர் அவரிடம் விசாரிக்கின்றனர்.