முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான விதிகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை
முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான விதிகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை
ADDED : பிப் 23, 2025 12:30 AM

சென்னை: 'ஆயுள் தண்டனை கைதிகளை, முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு தடையாக உள்ள விதிகளை மறு ஆய்வு செய்ய வேண்டிய நேரம் இது' என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ராஜ்குமார், 41, என்பவர், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவர் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி, தமிழக அரசுக்கு விண்ணப்பம் செய்திருந்தார். அதை பரிசீலித்த தமிழக அரசு, 'பெண்ணை கொடுமை செய்த குற்றச்சாட்டில், ராஜ்குமார் தண்டிக்கப்பட்டு உள்ளதால், அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய, அரசாணை விதிகள் இடம் அளிக்கவில்லை; அத்துடன் அவர், 14 ஆண்டு சிறைவாசத்தை பூர்த்தி செய்யவில்லை' எனக்கூறி, அவரது விண்ணப்பத்தை, கடந்தாண்டு ஜூன், 22ல் நிராகரித்தது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜ்குமார் மனு தாக்கல் செய்தார்.
இம்மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.முகமது சைபுல்லா, போலீஸ் தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் மற்றும் வழக்கறிஞர் எம்.சில்வெஸ்டர் ஜான் ஆகியோர் ஆஜராகினர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பெண்ணை கொடுமை செய்த குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு தண்டனையை, ஏற்கனவே மனுதாரர் அனுபவித்து விட்டார்.
வழக்கில் குறைந்தபட்ச தண்டனையை, ஏற்கனவே அனுபவித்து விட்டால், சம்பந்தப்பட்ட ஆயுள் தண்டனை கைதியை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என, ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வழக்கில் ராஜ்குமார், ஏற்கனவே குறைந்த தண்டனையை அனுபவித்து விட்டதால், உச்ச நீதிமன்றம் தீர்ப்புப்படி, முன்கூட்டியே விடுதலை பெற தகுதி பெறுகிறார். எனவே, ராஜ்குமாரை விடுதலை செய்ய வேண்டும்.
'குறைந்த தண்டனை விதிக்க வகை செய்யும், சில சட்டப்பிரிவுகளில் தண்டனை பெற்றிருந்தால், முன்கூட்டியே விடுதலை கோர தகுதியில்லை' என்ற அரசாணை விதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உள்ளன.
அதனால், முன்கூட்டி விடுதலை செய்ய தகுதியிழப்பு செய்யும் இந்த விதிகளை, மாநில அரசு மறு ஆய்வு செய்ய வேண்டிய நேரம் இது.
முன்கூட்டி விடுதலை கோரிய ராஜ்குமாரின் விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.