மருத்துவக் கழிவை எரிக்கும்போது இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு உயர்நீதிமன்றம் உத்தரவு
மருத்துவக் கழிவை எரிக்கும்போது இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூலை 10, 2024 11:24 PM
மதுரை:கள்ளச்சாராய மரணத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும்போது, மருத்துவக் கழிவுகளுக்கு தீ வைத்தபோது இறந்த பணியாளர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதில் தவறில்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை மறவனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு பணியாளராக கலையரசன் வேலை செய்தார். மணப்பாறை பழைய அரசு மருத்துவமனை பின்புறம் குப்பைகளுடன் சேர்த்து, காலாவதியான மருந்துகளுக்கு தீ வைக்க சானிடைசரை 2023 ஜூன் 26 ல் ஊற்றினார். தீ பற்ற வைக்கும்போது கலையரசன் மீது நெருப்பு பற்றியது. காயமடைந்த அவர் சிகிச்சையில் இறந்தார். மணப்பாறை போலீசார் வழக்கு பதிந்தனர்.
அவரது தந்தை அர்ஜூனன், 'நான் கூலித் தொழிலாளி. சம்பந்தப்பட்ட அலுவலர்களின் அலட்சியத்தால் சம்பவம் நடந்தது. ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக சுகாதாரத்துறை செயலருக்கு உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.
அரசு தரப்பு: மனுதாரரின் மகனே மருத்துவக் கழிவுகளை எரித்துள்ளார். உயரதிகாரிகளிடமிருந்து அறிவுறுத்தல் அல்லது வழிகாட்டுதலை பெறவில்லை. மணப்பாறை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயிரி மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்குத் தேவையான நடைமுறை பின்பற்றப்படுகிறது. விபத்திற்கான பொறுப்பை ஏற்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதி: குப்பைகளுக்கு தீ வைக்குமாறு கூறினார்கள் என சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டிடம் கலையரசன் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். உயரதிகாரிகளின் அறிவுறுத்தல் இல்லாமல் கலையரசன் குப்பை அள்ள சென்றிருக்க மாட்டார். அவருக்கு சானிடைசர் திரவம் வழங்கப்பட்டது. குப்பைகளை தீ வைத்து அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. எந்த முன்னெச்சரிக்கையும் கொடுக்கவில்லை.
சமீபத்தில், கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்தனர். இறந்த ஒவ்வொருவர் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீட்டை தமிழக அரசு அறிவித்துள்ளது. தெரிந்தே கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கும்போது, இவ்வழக்கில் ஒரு அப்பாவியின் தந்தைக்கு வழங்குவதில் தவறில்லை. இழப்பீடு கோரியதற்கு எதிராக பதில் மனு தாக்கல் செய்தது வருத்தமளிக்கிறது. மனுதாரரின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

