குண்டாஸ் கைது உத்தரவு விசாரணைமதுரையில் அறிவுரைக் கழகம் அமைக்காவிடில் சம்மன் உள்துறை செயலருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
குண்டாஸ் கைது உத்தரவு விசாரணைமதுரையில் அறிவுரைக் கழகம் அமைக்காவிடில் சம்மன் உள்துறை செயலருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
ADDED : ஜூலை 31, 2024 11:02 PM
மதுரை:உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எம்.பி.ஏ., வழக்கறிஞர்கள் சங்க பொதுச் செயலர் வெங்கடேசன் தாக்கல் செய்த பொதுநல மனு:
போதைப்பொருள், வனம் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தமிழக அரசு உத்தரவிடுகிறது. இதை மறு ஆய்வு செய்யக்கோரி சென்னையிலுள்ள அறிவுரைக் கழகத்தில் மேல்முறையீடு செய்யலாம். அங்கு கைது உத்தரவு ரத்து செய்யப்படவில்லை எனில் உயர்நீதிமன்றத்தை நாடலாம்.
தேசிய குற்ற ஆவண பதிவுக்கூடத்தின் 2021 அறிக்கையின்படி நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 51.2 சதவீதம், தெலுங்கானாவில் 11.4, குஜராத்தில் 10.7 சதவீதம் குண்டர் சட்ட கைது உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கூடுதலாக அறிவுரைக் கழகம் அமைக்க வேண்டிய தேவையுள்ளது. சென்னை அறிவுரைக் கழகத்திற்கு கைதிகளை அழைத்துச் சென்றுவருவதில் நடைமுறைச் சிரமங்கள், காலதாமதம் ஏற்படுகிறது.
அங்கு வழக்குகள் தேங்குகின்றன. அதன் பணிச் சுமையை குறைத்து, விரைவாக உத்தரவு பிறப்பிக்கும் வகையில் தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களுக்காக மதுரை அல்லது தகுந்த இடத்தில் கூடுதலாக அறிவுரைக் கழகம் அமைக்க 2023 டிச.,12ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு, ‛மதுரை அல்லது வேறு இடத்தில் கூடுதலாக அறிவுரைக் கழகம் அமைப்பது பரிசீலனையில் உள்ளது' எனக்கூறி அறிக்கை தாக்கல் செய்தது.நீதிபதிகள்: மதுரை அல்லது தகுந்த மாற்று இடத்தில் கூடுதலாக அறிவுரைக் கழகம் அமைக்க உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை 2 மாதங்களில் நிறைவேற்ற வேண்டும். தவறினால் ஏன் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என்பது குறித்து விளக்கமளிக்க உள்துறை செயலருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட வேண்டிய நிலை ஏற்படும். விசாரணை செப்., 25க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.