தீர்ப்பு வழங்குவதும் அவரே தட்டச்சு செய்வதும் அவரே! நுகர்வோர் நீதிமன்றங்களின் அவலநிலை
தீர்ப்பு வழங்குவதும் அவரே தட்டச்சு செய்வதும் அவரே! நுகர்வோர் நீதிமன்றங்களின் அவலநிலை
ADDED : ஆக 21, 2024 09:13 AM
சென்னை: மாநில, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள், தீர்ப்புகளை, தட்டச்சு செய்ய போதிய அளவில் சுருக்கெழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர்கள் இல்லாததால், நுகர்வோரும், வழக்கறிஞர்களும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
ஒரு சில இடங்களில், நீதிமன்ற உறுப்பினர்களே தட்டச்சு செய்யும் அவல நிலையும் தொடர்கிறது.
காலாவதியான பொருட்கள் விற்பனை, கூடுதல் விலை, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் சேவை குறைபாட்டால் பாதிக்கப்படுவோர், நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து, இழப்பீடு மற்றும் நிவாரணம் பெறலாம்.
90 நாட்கள்
நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி, மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் புகார் மனு அல்லது மேல்முறையீட்டு மனுவை, 90 நாட்களுக்குள் விசாரித்து முடித்து வைக்க வேண்டும். நுகர்வோர் மத்தியில் அதிகரித்து வரும் விழிப்புணர்வு காரணமாக, வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், காலி பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால், நுகர்வோர் நீதிமன்றங்களில் ஆண்டுக்கணக்கில் வழக்குகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. அதனால், வழக்குகளை தாக்கல் செய்த நுகர்வோரும், வழக்கறிஞர்களும் அவதிக்குள்ளாகினர்.
மாவட்ட, மாநில நுகர்வோர் நீதிமன்றங்களில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள், தீர்ப்பு விபரங்கள் கிடைக்க, குறைந்தது மூன்று முதல் ஆறு மாதம் வரை காத்திருக்க வேண்டி உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆளில்லை
இதுகுறித்து, நுகர்வோர் நீதிமன்ற ஊழியர்கள் கூறியதாவது:
மாநில, மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்புகள் சரியான நேரத்தில் கிடைக்காததால், நுகர்வோரும், வழக்கறிஞர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
உத்தரவுகள், தீர்ப்புகளை தட்டச்சு செய்யும் பணிக்கு, ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களும், அவ்வப்போது பணிக்கு வருவதில்லை.
ஏற்கனவே, நுகர்வோர் நீதிமன்றங்களில், 11 உறுப்பினர் காலியிடங்கள் உள்ளன. காலியிடங்கள் இருக்கும் நீதிமன்றங்களை, அருகில் உள்ள நீதிமன்ற தலைவர்கள் கூடுதலாக கவனித்து வருகின்றனர். வழக்கின் உத்தரவுகளை நீதிமன்ற உறுப்பினர்களே பிறப்பித்து, அவர்களே தட்டச்சு செய்யும் நிலை தொடருகிறது.
உத்தரவுகளை பதிவேற்ற, நிரந்தரமாக கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். மாநில நுகர்வோர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, ஓரிரு மாதங்களாக செயல்படவில்லை. அங்கு தலைவர், உறுப்பினர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதுவரை மூன்று உறுப்பினர்கள், பணியில் இருந்து விலகி விட்டனர். இதற்கு ஒரு நிரந்தர தீர்வை எடுக்காவிட்டால், நுகர்வோர் நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை இழக்க நேரிடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பெயரளவில் இணையதளம்?
மாநில, மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்புகள், விசாரணைக்கு பட்டியலிடப்படும் வழக்கு விபரங்களை, நுகர்வோர், வழக்கறிஞர்கள் அறிய வசதியாக, confonet.nic.in/ என்ற இணையதளம் உள்ளது. இந்த இணையதளத்தில் வழக்குகளின் தீர்ப்புகள் உள்ளிட்ட விபரங்கள், சரிவர பதிவேற்றம் செய்யப்படுவதில்லை. உரிய நேரத்தில் உத்தரவுகள் கிடைக்காததால், மேல்முறையீடு செய்ய காலதாமதம் ஏற்படுவதாகவும் வழக்கறிஞர்கள் புகார் கூறுகின்றனர்.