விவசாயிகளுக்கு யார் குரல் கொடுப்பார் ஓட்டுகளை அள்ளப்போவது அவரே
விவசாயிகளுக்கு யார் குரல் கொடுப்பார் ஓட்டுகளை அள்ளப்போவது அவரே
ADDED : மார் 30, 2024 01:09 AM
நாகப்பட்டினம்:காவிரியின் கடைமடையான நாகை, திருவாரூர் மாவட்டம் ஆண்டுதோறும் கர்நாடகா அரசுகளின் சண்டித்தனத்தால் காவிரி தண்ணீரால் பாதிக்கப்படும் நிலையில் கட்சி பாகுபாடின்றி தீர்வு காணும் வேட்பாளருக்கே இம்முறை ஓட்டளிப்பது என விவசாயிகள் தீர்க்கமாக உள்ளனர்.
நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம் ஆகிய சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய நாகை லோக்சபா தொகுதியில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது.
தொகுதிக்குள் தொழிற்சாலைகள் ஏதும் இல்லாத நிலையில், 50 சதவீதம் பேர் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக நம்பியுள்ளனர்.
தமிழகத்தின் உணவு தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்களிக்கும் இத்தொகுதி விவசாயிகள் ஆண்டுதோறும் காவிரி நீரால் பாதிக்கப்படுவது வழக்கமானது.
கர்நாடகா மாநிலம் காவிரியில் தண்ணீர் திறக்க அடம் பிடிக்கும் போது நீரின்றி பயிர்கள் காய்ந்து கருகுவதும், கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை காரணமாக காவிரியின் வடிகாலாக அதிகளவு திறந்து விடப்படும் வெள்ள நீரால் கடைமடையில் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி அழுகுவதாலும் விவசாயிகள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இரு மாநிலங்களுக்கு இடையிலான காவிரி பிரச்னைக்கு தீர்வு காண தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த எம்.பி.,யும், 50 ஆண்டுகளாக முயலவில்லை. ஒவ்வொரு முறையும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஓட்டுப் போட்டு ஏமாந்து விட்டோம்.
இம்முறை லோக்சபாவில் விவசாயிகளுக்கு யார் குரல் கொடுப்பார் என நம்பிக்கை வருமோ அவருக்கே விவசாயிகள் ஓட்டளிப்பது என தீர்மானத்தோடு உள்ளோம் என்கின்றனர் அப்பகுதி விவசாயிகள்.

