'2022ல் நிறைவேற்றுவதாக சொன்னார் இப்போது நிதி இல்லை என்கிறார்' அமைச்சர் மீது மருத்துவ பணியாளர்கள் புகார்
'2022ல் நிறைவேற்றுவதாக சொன்னார் இப்போது நிதி இல்லை என்கிறார்' அமைச்சர் மீது மருத்துவ பணியாளர்கள் புகார்
ADDED : ஆக 22, 2024 02:33 AM

சென்னை:காலமுறை ஊதியம் கோரி, டி.எம்.எஸ்., வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற, பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களை, போலீசார் கைது செய்தனர். இதனால், அண்ணா சாலையில் அமர்ந்து சிலர் தர்ணாவில் ஈடுபட்டதால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினக்கூலி அடிப்படையில், 3,200 பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு தினக்கூலியாக 650 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை வழங்கப்பட்டு வருகிறது.
கைது
காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், நேற்று காலை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். நுழைவாயிலை மூடிய போலீசார், போராட்டத்திற்கு வந்தவர்களை கைது செய்தனர்.
இதனால், சிலர் அண்ணா சாலையில் அமர்ந்து, தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். அதனால், அண்ணா சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து, அரசு பணி யாளர்கள் சங்கத் தலைவர் குமார் கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறோம். 2018ல் காலமுறை ஊதியம் கோரி போராட்டம் நடத்தினோம்.
ஒப்புதல்
தொடர்ந்து, 2022ல் நடந்த போராட்டத்தின்போது, எங்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.
அதன்படி, பொது சுகாதாரத் துறையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, நிதித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அரசிடம் போதியளவில் நிதி இல்லை என காரணம் காட்டி, எங்களின் காலமுறை ஊதிய உயர்வுக்கு, அரசு ஒப்புதல் அளிக்காமல் உள்ளது.
இதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற எங்களை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.