ADDED : ஏப் 22, 2024 06:25 AM
சென்னை : பறவைக் காய்ச்சல் தொற்று பாதிப்பு ஏற்பட்டால், அவற்றை எதிர்கொள்ளும் வகையில், தமிழக சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது: கேரள மாநிலம், ஆலப்புழையில் உள்ள பண்ணைகளில், ஆயிரக்கணக்கான வாத்து, கோழிகள் பறவைக் காய்ச்சலுக்கு உள்ளாகி உயிரிழந்தன.
இதையடுத்து, அந்த மாநிலத்தை ஒட்டியுள்ள தேனி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில், மருத்துவக் கண்காணிப்பையும், சோதனையையும் தீவிரப்படுத்தி உள்ளோம்.
பறவைக் காய்ச்சலுக்கு உள்ளான பறவைகளின் எச்சத்தில் இருந்து, மனிதனுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது. அது, தமிழகத்தில் பரவாத வகையில் நடவடிக்கைகளை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு வழிகாட்டல்களை வழங்கி உள்ளோம்.
காய்ச்சல், தலைவலி, தசைப் பிடிப்பு, இருமல், மூச்சு திணறல் போன்றவை, பறவை காய்ச்சலின் அறிகுறிகள். நோய் பரவலை தடுக்கும் வகையில், மருந்துகள், கிருமி நாசினிகள் கையிருப்பில் வைப்பதோடு, மருத்துவ பணியாளர்களுடன், சுகாதாரப் பணியாளர்களையும் ஒருங்கிணைத்துள்ளோம்.
கால்நடை பராமரிப்பு துறை வாயிலாக, விரைவு மருத்துவக் குழுக்களுக்கான பயிற்சிகளை அளிக்க உள்ளோம்.
அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருவோரை கண்காணிக்கவும், தொடர்ந்து பரிசோதனை செய்யவும், பாதிப்பு விபரங்களை சுகாதாரத் துறைக்கு தெரியப்படுத்தவும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

