தேர்தல் விளம்பரத்துக்கு அனுமதி மறுப்பு தி.மு.க., வழக்கில் இன்று விசாரணை
தேர்தல் விளம்பரத்துக்கு அனுமதி மறுப்பு தி.மு.க., வழக்கில் இன்று விசாரணை
ADDED : ஏப் 18, 2024 01:07 AM
சென்னை:தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுப்பதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர முடியும் என்ற உத்தரவின் நகலை தாக்கல் செய்ய, ஆணையத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, தாக்கல் செய்த மனு:
தி.மு.க., சார்பில், 'இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்' என்ற தலைப்பில், தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக்காட்டி 'டிவி' விளம்பரங்களை மேற்கொள்ள திட்டமிட்டு, மாநில அளவிலான குழுவிடம், சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தோம். சான்றிதழ் அளிக்க, மாநில சான்றிதழ் குழு மறுத்து விட்டது. ஒருமைப்பாடு, இறையாண்மைக்கு எதிராக இருப்பதாகவும், மற்ற அரசியல் கட்சிகளை விமர்சிப்பதாகவும், காரணங்களை கூறியது.
மாநில சான்றிதழ் குழு உத்தரவை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்பட்டது. ஏற்கனவே நிராகரித்த உத்தரவை, தலைமை தேர்தல் அதிகாரி உறுதி செய்து, கடந்த 4ம் தேதி உத்தரவிட்டார். சரிவர பரிசீலிக்காமல், இயந்திரகதியாக விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் அதிகாரியின் உத்தரவை ரத்து செய்து, சான்றிதழ் வழங்க, உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.
தேர்தல் ஆணையம் சார்பில், வழக்கறிஞர் நிரஞ்சன் ஆஜராகி, ''விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்து, மாநில அளவிலான குழு பிறப்பிக்கும் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தான் முறையீடு செய்ய முடியும்,'' என்றார். இதையடுத்து, வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, ''தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்த உத்தரவுகளை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என, 2004ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு நீடிப்பதாக கூற முடியாது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் விதிகள் வகுக்கப்பட்டன. அதில் மேல்முறையீடு செய்ய, வழிவகை இல்லை,'' என்றார்.
தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன், ''உச்ச நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர முடியும் என்ற உத்தரவு, 2004ல் இருந்து அமலில் உள்ளது. அதன் அடிப்படையில், பல்வேறு குழுக்களை, தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது,'' என்றார். உச்ச நீதிமன்ற உத்தரவின் நகலை தாக்கல் செய்ய, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை, இன்றைக்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

