ADDED : ஏப் 18, 2024 11:32 PM
சென்னை:வட மாவட்டங்களில் இன்று வெப்ப அலைகள் தாக்கும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுதும் கோடை வெயில் தீவிரம் காட்டி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில், கடந்த 12ம் தேதி முதல் ஐந்து நாட்களாக அவ்வப்போது மிதமான மழை பெய்து வந்தது. நேற்று முன்தினத்துடன் இந்த கோடை மழை முடிந்து விட்டது.
மாநிலம் முழுதும் மீண்டும் வெயில் தீவிரம் அடைந்துள்ளது. தேர்தல் நடக்கும் இன்று, வட மாவட்டங்களில் வெப்ப அலைகள் தாக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் வெயில் தீவிரம் அடையும்.
கடலோரம் அல்லாத உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக வேலுாரில் 42 டிகிரி செல்ஷியஸ், அதாவது 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
கோவை, பாளையங்கோட்டை 38; சென்னை மீனம்பாக்கம், தஞ்சாவூர் 39; திருப்பத்துார், தர்மபுரி, நாமக்கல், திருத்தணி 40; திருச்சி, ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை, சேலம் 41 டிகிரி செல்ஷியஸ் என, 14 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டையொட்டி வெப்பம் பதிவானது.
சென்னை நுங்கம்பாக்கம் 37; கடலுார், நாகை, புதுச்சேரி, தொண்டி 36; பாம்பன் 35; துாத்துக்குடி, கன்னியாகுமரி 34; ஊட்டி 27; கொடைக்கானல் 24 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.

