ADDED : பிப் 27, 2025 11:32 PM
சென்னை:கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் 10 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இம்மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. வட மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்பட்டது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, கடலோர மாவட்டங்களில், அநேக இடங்கள், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை ஆகிய, 10 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்புஉள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாகக் காணப்படும். ஒருசில இடங்களில், இடி மின்னலுடன் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புஉள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

