ADDED : ஜூன் 01, 2024 09:40 PM
சென்னை:'தமிழகத்தில் இன்று, 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன் இயக்குனர் செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென்மாவட்ட பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே, இன்று முதல் 5ம் தேதி வரை, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ., வேகத்தில் காற்றுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
ஏற்காட்டில், 4 செ.மீ.,
இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பத்துார், கிருஷ்ணகிரி, வேலுார், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலுார் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், வடமாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்துஉள்ளது.
அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஏற்காட்டில், 4 செ.மீ., பெய்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், திருச்சி மாவட்டம் சிறுகமணி ஆகிய இடங்களில், தலா 3 செ.மீ., மழை பதிவானது.
எச்சரிக்கை
இன்று முதல் 4ம் தேதி வரை, குமரிக்கடல் பகுதி கள், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய தென்மாவட்ட கடலோர பகுதிகளில், சூறாவளிகாற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்.
தென்மேற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில், சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ., வேகத்திலும் வீசலாம்.
தெற்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில், சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்.
இந்நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
