தென் மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை மையம் தகவல்
தென் மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை மையம் தகவல்
ADDED : மார் 11, 2025 05:06 AM

சென்னை : 'வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென்மாவட்டங்களில் இன்று மிக கனமழையும், டெல்டா மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அதன் அறிக்கை:
பூமத்திய ரேகையை ஒட்டிய, வடகிழக்கு இந்திய பெருங்கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அனேக இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில், இன்று இடி மின்னலுடன், மிதமான மழை பெய்யலாம்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், இன்று கனமழை பெய்யலாம்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மழை எச்சரிக்கை பட்டியலில் வராத, பிற மாவட்டங்களில், இன்றும், நாளையும், பகல் நேர வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை கூடுதலாக பதிவாகும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.