ADDED : ஜூலை 12, 2024 02:43 AM
சென்னை:திண்டுக்கல், தேனி உள்பட ஐந்து மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அளவில், மீண்டும் பருவ மழை பரவலாக பெய்யத் துவங்கியுள்ளது. நேற்று காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக திருமயத்தில் 9 செ.மீ., மழை பெய்தது. பொன்னேரி 8; செங்குன்றம், ஆவடி, புழல், திருக்கழுகுன்றம், கத்திவாக்கம், ராணிப்பேட்டை 7 செ.மீ., மழை பெய்தது. மேலும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் 6 செ.மீ., வரை மழை பதிவாகியுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பிற பகுதிகளில் மிதமான மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி மாநிலத்தில் அதிகபட்சமாக, மதுரை, தொண்டி, பாளையங்கோட்டையில், 39 டிகிரி செல்ஷியஸ் அதாவது 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
கரூர் பரமத்தியில் 38 டிகிரி செல்ஷியஸ் பதிவானது. மாநில அளவில் 4 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. சென்னையில் 32 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.

