ADDED : ஜூன் 21, 2024 01:09 AM
சென்னை:'இன்றும், நாளையும், நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கன மழையும், ஆறு மாவட்டங்களில் கன மழையும் பெய்யும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக மதுராந்தகத்தில் 15 செ.மீ., மழை பெய்துள்ளது. தேவாலா 11; திருப்பத்துார் 9; கூடலுார் பஜார் 7; ஆரணி, திருக்கழுங்குன்றம், சின்னக்கல்லார் 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
மாநிலம் முழுதும், 80க்கும் மேற்பட்ட இடங்களில், 1 முதல் 4 செ.மீ., வரை மழை பெய்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, மதுரை விமான நிலையத்தில் 38 டிகிரி செல்ஷியஸ், அதாவது 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை பதிவானது.
நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் நாளை முதல் இரு நாட்களுக்கு மிக கன மழை பெய்யும். திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில், நாளை முதல் இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும்.
இந்த மாவட்டங்களில், வரும் 24ம் தேதி வரை கன மழை நீடிக்கும். இன்று தமிழகம், புதுச்சேரியில், சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; மாலை மற்றும் இரவு நேரத்தில் இடி, மின்னலுடன் திடீர் மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்சம், 27 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.
தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகள், லட்சத்தீவு, கேரள கடலோரம், தென் கிழக்கு அரபிக்கடல், கர்நாடக கடலோரம் ஆகிய பகுதிகளில், மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசுகிறது. எனவே, 24ம் தேதி வரை மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

