நீலகிரி, கோவைக்கு கனமழை எச்சரிக்கை: பள்ளிகளுக்கு விடுமுறை
நீலகிரி, கோவைக்கு கனமழை எச்சரிக்கை: பள்ளிகளுக்கு விடுமுறை
UPDATED : ஜூன் 27, 2024 07:02 AM
ADDED : ஜூன் 27, 2024 06:55 AM

சென்னை: நீலகிரி, கோவையில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக, சின்னக்கல்லாரில், 20 செ.மீ., மழை பெய்துள்ளது. தேவாலா, 19; கூடலுார் பஜார், சின்கோனா, 15; வால்பாறை, மேல் கூடலுார், 14; பந்தலுார், சோலையார், 12; அவலாஞ்சி, வால்பாறை, 11 செ.மீ., மழை பெய்துள்ளது.
இன்று, நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் மட்டும் கனமழை பெய்யும். மற்ற இடங்களில் இன்று மிதமான மழை பெய்யும். தமிழகம், புதுச்சேரியில், ஜூலை 2 வரை மிதமான மழை பெய்யும். வரும் 30ம் தேதி வரை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், அதிகபட்ச வெப்ப நிலை இயல்பு அளவை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாக பதிவாகும்.
பள்ளிகளுக்கு விடுமுறை
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (ஜூன் 27) விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி, தொண்டி, பரங்கிப்பேட்டையில், 37 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவானது. துாத்துக்குடி, 36; சென்னை, நாகை, 35; மதுரை, 34; புதுச்சேரி, 32; கோவை, 29; கொடைக்கானல், 19 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.