ADDED : பிப் 25, 2025 11:21 PM
சென்னை:'வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய பகுதிகள் மீது, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் இன்று, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதர மாவட்டங்களில், பொதுவாக வறண்ட வானிலை காணப்படும்; காலை லேசான பனிமூட்டம் நிலவும். கடலோர மாவட்டங்கள் மற்றும் உட்புற மாவட்டங்களில், ஒருசில இடங்களில் நாளை, இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மறுதினம் மற்றும் மார்ச் 1ம் தேதியும் கனமழை தொடர வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், காலை லேசான பனிமூட்டம் இருக்கும்.
தெற்கு அந்தமான், வடக்கு அந்தமான், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், மணிக்கு அதிகபட்சமாக 55 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.