ADDED : மே 23, 2024 07:48 AM

சென்னை : கேரளாவின் தெற்கு மற்றும் அதையொட்டிய பகுதிகளில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில், கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில், இன்றும் நாளையும் கன மழை பெய்யும்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக வடக்கு கடலோரம், ஆந்திராவின் தெற்கு பகுதிகளை ஒட்டி, தென் மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று உருவானது.இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, வங்கக் கடலின் மத்திய பகுதியில் நிலவும். அதன்பின் மேலும் வலுப்பெற்று, வடகிழக்கு, வட மேற்கு பகுதிகளில், 25ம் தேதி மாலை நிலவும்.
இதற்கிடையில், கேரளாவின் தெற்கு மற்றும் அதையொட்டிய பகுதிகளில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் சில மாவட்டங்களில், இன்றும் நாளையும் கன மழை பெய்யும்.
தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரிமற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று மிக கன மழை பெய்யும். இந்த பகுதிகளுக்கு, 'ஆரஞ்சு அலெர்ட்' விடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில், இன்று கன மழை பெய்யும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், நாளை கன மழை பெய்யும்; மற்ற இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சூறாவளி காற்று
குமரிக்கடல், மன்னார்வளைகுடா, தென் மாவட்ட கடலோரம், தென் மேற்கு வங்கக் கடல், மத்திய வங்கக் கடலின் மத்திய பகுதிகள், தெற்குப் பகுதி, அதையொட்டிய மத்திய மேற்கு மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் இன்று முதல், 26ம் தேதி வரை மணிக்கு, 65 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.
அந்தமான் கடல் பகுதிகளில், வரும் 25 மற்றும் 26ம் தேதிகளில், மணிக்கு 65 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். அதேபோல், கேரள கடலோரம், மாலத்தீவு, தென் கிழக்கு அரபிக் கடல், கர்நாடக கடலோர பகுதிகளில், வரும் 25ம் தேதி வரை மணிக்கு, 65 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.
எனவே, மேற்கண்ட பகுதிகளுக்கு குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் செல்ல வேண்டாம். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள், இன்று கரைக்கு திரும்ப, வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

