ராணுவ வீரர்களின் ஓய்வூதியம் எளிதில் கிடைக்க இதோ வழி!
ராணுவ வீரர்களின் ஓய்வூதியம் எளிதில் கிடைக்க இதோ வழி!
ADDED : ஜூலை 31, 2024 01:12 AM

சென்னை:''கடந்த மூன்று மாதங்களில், 21,000 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன், இப்பிரச்னைகளுக்கு ஆறு மாதங்கள் வரை கூட தீர்வு கிடைக்காமல் இருந்தது. தற்போது, 48 மணி நேரத்தில் தீர்வு வழங்கி வருகிறோம்,'' என, சென்னையில் உள்ள பாதுகாப்பு துறை கணக்கு கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
ராணுவ வீரர் ஓய்வூதியம் தொடர்பாக புகார் அளிக்க, 88073 80165 என்ற, 'வாட்ஸாப்' எண் வழங்கப்பட்டுள்ளது. pgportal.gov.in/pension என்ற இணையதளத்திலும் புகார் தெரிவிக்கலாம். இவற்றில் வரும் புகார்களை, ஒவ்வொரு வாரமும் அதிகாரிகள் ஆலோசித்து தீர்த்து வைப்பர்.
புகார் அளிப்பவர்கள், ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை காலை 11:00 மணிக்கு, கட்டுப்பாட்டாளரை நேரடியாக சந்தித்து, தீர்வு காணும் வகையில், 'காபி வித் கன்ட்ரோலர்' என்ற நிகழ்ச்சியையும் நடத்துகிறோம்.
இந்த நிகழ்ச்சியின் வாயிலாக, அதிகபட்சமாக இரண்டு வாரங்களில் தீர்வு அளிக்கிறோம். வேலுார், திருச்சி, நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகங்களிலும் குறைகளுக்கு தீர்வு காண விண்ணப்பிக்கலாம்.
என்ன காரணம்?
ராணுவ வீரர்கள் ஓய்வு பெறும் போது எழுதும், 'டிஸ்சார்ஜ் சம்மரி'யில் உள்ள மனைவி பெயரிலும், ஆதார் அட்டையில் உள்ள பெயரிலும் ஏதேனும் வித்தியாசம் இருந்தால், ஓய்வூதியம் கிடைப்பதில் சிக்கல் எழும்.
வடமாநிலங்களில் தொடர்ச்சியாக, முதல், மத்தி, கடைசி பெயர்கள் இடம் பெறும். இதில் ஏதேனும் மாற்றம் இருந்தாலோ, எழுத்து மாற்றங்கள் இருந்தாலோ, இதுபோன்ற சிக்கல்கள் எழும்.
கணவன் பெயரில் இருந்த வங்கி கணக்கை மனைவி பெயருக்கு மாற்றாவிட்டாலும், கணினி வழியில் சிக்கல் எழும். இவற்றை, ஆதார் எண், நாமினி, வங்கிக் கணக்கு எண் உள்ளிட்டவற்றை வைத்து, நேரடியாக சரி செய்யலாம்.
இல்லம் தேடி உள்ளம்
முப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், குறிப்பாக 80 வயதை தாண்டியவர்களுக்கு, அவர்களின் வீட்டில் இருந்தபடியே சலுகைகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
'பென்ஷன் அதாலத்'
நேரில் வர முடியாதவர்கள் எங்களை தொடர்பு கொண்டால், அலுவலர்களே நேரில் சென்று நிவர்த்தி செய்வர். மாதந்தோறும் இரண்டு முறை இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில், புதுச்சேரி, மதுரை, நாகர்கோவில், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படும்.
ஆண்டுதோறும், 'பென்ஷன் அதாலத்' எனும், ஓய்வூதியர் குறைதீர் முகாம் வாயிலாக, பல பிரச்னைகளுக்கு உடனடி தீர்வுகள் காணப்படுகின்றன.
நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்ப நலனை காக்க, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

