குறவன், குறத்தி பெயர்களைபயன்படுத்த தடை கோரி வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
குறவன், குறத்தி பெயர்களைபயன்படுத்த தடை கோரி வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ADDED : ஜூலை 26, 2024 11:51 PM
மதுரை:மதுரை மேல அனுப்பானடி ராவணன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
நாம் தமிழர் கட்சியில் தமிழ் பழங்குடியினர் பாதுகாப்பு பிரிவு மாநில துணைச் செயலராக உள்ளேன். தமிழகத்தின் பூர்வகுடிகள் குறவர் சமூகம். இவர்களை அரசியல் மேடைகள், சினிமாக்கள், பொது மேடைகள், பொது இடங்கள், கலாசார மற்றும் பிற நிகழ்ச்சிகளில் இழிவுபடுத்துகின்றனர். குறவன், குறத்தி பெயரை ஆட்சேபகரமான முறையில் குறிப்பிட்டு, அச்சமூகத்தை அவமதித்து, அவர்களின் உணர்வுகளை புண்படுத்துகின்றனர்.
பொது இடங்கள், மேடைகள், சினிமாக்கள், பாடல்கள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகளில் சண்டாளர் என்ற ஜாதிப் பெயர் தவறாக பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மீறினால் பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதுபோல் குறவர் சமூகத்தினரை பாதுகாக்க அறிவிப்பு வெளியிட வேண்டும். அவர்கள் முற்காலத்தில் குறிஞ்சி, அதாவது மலைப்பகுதி வழித்தோன்றல்கள் என்று தமிழ் இலக்கியம் குறிப்பிடுகிறது. அவர்களின் பெருமை, வரலாறு மதிக்கப்பட வேண்டும். நகைச்சுவையாக அல்லது எதிரிகளை இழிவான முறையில் மறைமுகமாக குறிப்பிடும் நோக்கில் குறவன், குறத்தி என்ற சொற்களை பயன்படுத்த தடை விதித்து அறிவிப்பு வெளியிடக்கோரி தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாநில கமிஷனுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி ஆர்.விஜயகுமார் அமர்வு, தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கமிஷன் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.