ஆடல், பாடலுக்கு அனுமதி நீர்நிலையை துார்வார ரூ.25 ஆயிரம் உயர்நீதிமன்றம் உத்தரவு
ஆடல், பாடலுக்கு அனுமதி நீர்நிலையை துார்வார ரூ.25 ஆயிரம் உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூலை 31, 2024 10:58 PM
மதுரை:சிவகங்கை மாவட்டம், உடவயலில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதியளித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, நீர்நிலைகளை துார்வார ஊராட்சிக்கு ரூ.25 ஆயிரம் செலுத்த மனுதாரருக்கு உத்தரவிட்டது.
காளையார்கோவில் அருகே உடவயல் ஜெயராமன் தாக்கல் செய்த மனு:
உடவயலில் கோயில் திருவிழாவையொட்டி இன்று (ஆக.,1) மாலை 6:00 முதல் இரவு 10:00 மணி வரை ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி, பாதுகாப்பு கோரி காளையார்கோவில் போலீசாரிடம் மனு அளித்தோம். நிராகரிக்கப்பட்டது. அதை ரத்து செய்து அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்: கிராமத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை என்ற கேள்விக்கே இடமில்லை. பிரச்னை ஏற்பட்டால் அதற்கு பொறுப்பு ஏற்பதாக மனுதாரர் உத்தரவாதம் அளிக்கத் தயார். கிராமத்திலுள்ள நீர்நிலைகளை துார்வார ஊராட்சி தலைவருக்கு ரூ.25 ஆயிரம் வழங்கத் தயார்.இவ்வாறு தெரிவித்தார்.
நீதிபதி: சட்டத்தை யாரேனும் கையில் எடுத்தால், சம்பந்தப்பட்ட நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிபந்தனைகளுக்குட்பட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்க டி.ஜி.பி.,வழிகாட்டுதல் பிறப்பித்துள்ளார். அதனடிப்படையில் இந்நிகழ்ச்சிக்கு அனுமதியளிக்க வேண்டும். கிராமத்திலுள்ள நீர்நிலைகளை துார்வாரும் பணிக்காக ஊராட்சி தலைவரிடம் ரூ.25 ஆயிரத்தை மனுதாரர் செலுத்த வேண்டும்.
அத்தொகை துார்வார முறையாக பயன்படுத்தப்பட்டதா என்பதை போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.