'டயபர்' அணிந்து 'நீட்' எழுத அனுமதி மாணவிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
'டயபர்' அணிந்து 'நீட்' எழுத அனுமதி மாணவிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
ADDED : மே 01, 2024 09:16 PM
மதுரை:சிறுநீர் பை பாதிப்பால் கட்டுப்பாடின்றி தொடர்ந்து சிறுநீர் வெளியேறுவதால், 'டயபர்' அணிந்து 'நீட்' தேர்வில் பங்கேற்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டது.
ஒரு மாணவி தாக்கல் செய்த மனு:
சிறுநீர் பை பாதிப்பிற்கு சிகிச்சை பெறுகிறேன். கட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து சிறுநீர் வெளியேறுவதால் 'டயபர்' அணிய வேண்டும்; அதை அடிக்கடி மாற்ற வேண்டும் என, டாக்டர் சான்றளித்துள்ளார்.
மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, வரும் 5ல் 'நீட் 'தேர்வு நடைபெற உள்ளது. டயபர் அணிந்து தேர்வு மையத்திற்குள் நுழைய அனுமதிக்க வேண்டும்.
இடைப்பட்ட நேரத்தில், தேவைக்கேற்ப டயபரை மாற்ற அனுமதிக்கக் கோரி, தேசிய தேர்வு முகமைக்கு மனு அனுப்பினேன். அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்:
'நீட்' தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் கட்டாய சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதில் பெண்கள் அதிக சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
விண்ணப்பதாரர்கள் ஆடை, காலணிகள் அணிந்து தேர்வு மையத்திற்கு வருவதில், கட்டுப்பாடுகளை தேசிய தேர்வு முகமை விதித்துள்ளது.
மனுதாரர் தேர்வு மையத்தில் இருக்கும்போது மட்டும் அல்லாமல் எப்போதும் டயபர் அணிய வேண்டும்; அதை அடிக்கடி மாற்ற வேண்டும். அதற்கு அவசியம் கழிப்பறைக்கு செல்ல வேண்டும்.
எனவே, ஒவ்வொரு தேர்வு மையத்திலும் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை வசதி இருக்க வேண்டும். முன்னேற்பாடு இல்லாமல் வரும் எந்தப் பெண்ணும் அவற்றை பயன்படுத்தும் வகையில் கழிப்பறைகளுக்கு அருகில், சானிட்டரி நாப்கின் போன்ற பொருட்களை வைத்திருக்க வேண்டும்.
பெண் விண்ணப்பதாரர்கள் தேவைப்படும் போது கழிப்பறைகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். கழிப்பறைகளை முன்கூட்டியே முழுமையாக ஆய்வு செய்ய முடியும். இதனால், தேர்வு எழுதுவோரை இரண்டாவது முறையாக சோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை.
இவ்வாறு உத்தரவிட்டார்.

