ஹிண்டன்பர்க் பரபரப்பு குற்றச்சாட்டு: அதானி குழுமம், 'செபி' தலைவர் மறுப்பு
ஹிண்டன்பர்க் பரபரப்பு குற்றச்சாட்டு: அதானி குழுமம், 'செபி' தலைவர் மறுப்பு
ADDED : ஆக 12, 2024 04:15 AM

மும்பை : அதானி குழுமம் முறைகேடு செய்வதற்காக பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில், 'செபி'யின் தலைவர் மதாபி புரி புச் மற்றும் அவரது கணவருக்கு பங்குகள் இருந்ததாக 'ஹிண்டன்பர்க்' நிறுவனம் குற்றச்சாட்டை தெரிவித்திருந்த நிலையில், 'இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை; உள்நோக்கம் உடையவை' என, செபி தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதானி குழுமமும் மறுப்பு தெரிவித்து உள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் பிரபல முதலீட்டு ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், உலகின் பெரிய வர்த்தக நிறுவனங்களில் நடக்கும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.
நிதி முறைகேடு
அந்த வகையில், நம் நாட்டின் முன்னணி வர்த்தக நிறுவனமான அதானி குழுமம், பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டு, தங்கள் நிறுவன பங்குகளை போலியாக அதிகரிக்கச் செய்வதாக, கடந்த ஆண்டு ஜனவரியில் அறிக்கை வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து, அதானி நிறுவன பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. பல நுாறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து, செபி எனப்படும் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பை விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுகுறித்து விசாரணை நடத்திய செபி, உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
அதில், 'அதானி குழுமம் எந்த முறைகேடும் செய்யவில்லை' என, குறிப்பிட்டு இருந்தது. இதையடுத்து, ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை என, உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச்சில் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், ஹிண்டன்பர்க் நிறுவனம் நேற்று முன்தினம் மீண்டும் ஒரு புயலை கிளப்பியது. அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், அதானி குழுமம் முறைகேடு செய்வதற்காக பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில், செபியின் தலைவர் மதாபி புரி புச் மற்றும் அவரது கணவருக்கு பங்குகள் இருந்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தது.
மேலும், 'செபி தலைவர் தன் தனிப்பட்ட ஆதாயத்திற்காகவே அதானி குழுமம் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்றும் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியிருந்தது.
ஹிண்டன்பர்க்கின் இந்த குற்றச்சாட்டுகள் தவறானவை; உள்நோக்கம் கொண்டவை மற்றும் அடிப்படை ஆதாரமற்றவை என, செபி தலைவர் மதாபியும், அவரது கணவரும் மறுத்துள்ளனர். அவர்கள் வெளியிட்டு உள்ள அறிக்கை:
எங்கள் வாழ்க்கை மற்றும் நிதி பரிமாற்றங்கள் எப்போதுமே திறந்த புத்தமாக இருந்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக தேவையான அனைத்து தகவல்களையும் செபியிடம் அளித்துள்ளோம்.
விரிவான அறிக்கை
நாங்கள் தனி நபர்களாக இருந்தபோது இருந்த ஆவணங்கள் உட்பட மேலும் தேவைப்படும் நிதி ஆவணங்களை வெளியிட எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. இவ்விவகாரத்தின் வெளிப்படைத்தன்மைக்காக விரைவில் விரிவான அறிக்கை வெளியிடப்படும்.
செபி அமைப்பு, ஹிண்டன்பர்க்குக்கு எதிராக அமலாக்க நடவடிக்கை எடுத்ததுடன், கடந்த ஜூன் மாதம் நோட்டீசும் அனுப்பியது. இதற்கு எதிராக, செபியின் பெயருக்கு களங்கம் விளைவிக்க ஹிண்டன்பர்க் முயன்றுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டு குறித்து அதானி குழுமமும் தன் மறுப்பை பதிவு செய்துள்ளது.
அதன் விபரம்:
அதானி குழுமத்தின் மீது சுமத்தப்பட்டுஉள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை, அடிப்படை ஆதாரமற்றவை. இந்திய சட்டங்களை அவமதிக்கும் ஒரு நிறுவனத்தால் சுமத்தப்பட்டுள்ள பொய் குற்றச்சாட்டுகள். இதை நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கிறோம்.
இந்த குற்றச்சாட்டுகளை 2024 ஜனவரியில் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. எங்கள் வெளிநாட்டு முதலீடுகள் வெளிப்படை தன்மை உடையவை. அது குறித்த அனைத்து தகவல்களும் பொது ஆவணங்களில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்நிறுவனம் தெரிவித்து இருப்பதை போல எந்த தனி நபர்களுடனும் எங்கள் நிறுவனத்துக்கு வர்த்தக தொடர்பு கிடையாது. இது வேண்டுமென்றே எங்கள் மீது பரப்பப்பட்டுள்ள அவதுாறு. சட்டம் மற்றும் ஒழுங்குமுறை விதிகளுக்கு இணங்கி நடக்க நாங்கள் எப்போதும் உறுதி கொண்டுள்ளோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செபி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை முறையாக விசாரிக்கப்பட்டுள்ளன. இதன் மீது நடத்தப்பட்ட பல கட்ட விசாரணைகளில் 26வது கட்ட விசாரணை முடியும் தருவாயில் உள்ளது. மேலும், செபி தலைவர் புச் மற்றும் அவரது கணவர் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இது செபியின் நம்பகத்தன்மையை குலைக்கும் வகையில் உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளது.