காங்., ஆட்சியில் கட்டாயப்படுத்தப்பட்ட மொழியானது ஹிந்தி: இப்போது அதை படித்தால்தான் தொழில் செய்ய முடிகிறது!
காங்., ஆட்சியில் கட்டாயப்படுத்தப்பட்ட மொழியானது ஹிந்தி: இப்போது அதை படித்தால்தான் தொழில் செய்ய முடிகிறது!
UPDATED : பிப் 23, 2025 07:44 AM
ADDED : பிப் 23, 2025 01:32 AM

கரூர்: 'வெளிமாநிலங்களில் வணிகம் மேற்கொள்ளவும், அதன் வளர்ச்சிக்கும் மூன்றாவது மொழி அவசியம்' என, கரூர் தொழில்முனைவோர் கருத்து தெரிவித்து உள்ளனர்.
கரூரில், வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், கொசு வலை, பஸ் பாடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஏற்றுமதி, வெளி மாநிலங்களில் வணிகம் மேற்கொள்ளவும், அதன் வளர்ச்சிக்கும், ஹிந்தியும், ஐரோப்பிய நாடுகளில் உள்ள மொழிகளையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
இதுகுறித்து, கரூர் தொழில் முனைவோர் கூறியதாவது:
கே.நந்தகோபால், வேளாண் பொருட்கள் உற்பத்தியாளர், க.பரமத்தி: காங்., ஆட்சி இருந்தவரை, தேசிய கல்விக் கொள்கையில், மூன்றாவது மொழியாக ஹிந்தி கட்டாயம் என்று இருந்து வந்தது. ஆனால், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும், தேசிய கல்விக் கொள்கையில் பெரிய மாற்றமாக, ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி பயின்றும், ஆங்கிலம் கட்டாயம் மொழியாகவும் ஆனது.
மூன்றாவது மொழியாக ஹிந்தி கட்டாயம் கிடையாது. விருப்பத்திற்கு ஏற்ப மொழியை தேர்வு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதனால், ஏழை, எளிய நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், இந்திய மொழிகளில் ஏதாவது ஒரு மொழியை மாணவர்கள், அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வெளி மாநிலங்களுக்கு கல்வி கற்க, மத்திய அரசு பணி, தொழில் தொடங்க மூன்றாவது மொழி இருந்தால் சிரமம் இருக்காது. வெளிநாடுகளில் கல்வி, தொழில் செய்ய மூன்றாவது மொழி அவசியம்.
சிந்தியா நடேசன், பெட்ரோல் பங்க் உரிமையாளர், பஞ்சமாதேவி, கரூர்: தற்போது போட்டிகள் நிறைந்த வணிக உலகில், பல மொழிகள் கற்றுக்கொள்வது மிக அவசியமாகிறது. பெட்ரோல் பங்க் தொழில்களை மேற்கொள்ளும்போது, ஹிந்தி அவசியம் தேவைப்படுகிறது.
உயர் அதிகாரிகளுக்கு வேண்டுமானால் ஆங்கிலம் தெரிந்திருக்கலாம். அவர்களுக்கு கீழே உள்ள அதிகாரிகளுக்கு, ஆங்கிலம் தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு.
அப்போது, ஹிந்தியில் சரளமாக உரையாடினால், நமக்கு வேண்டிய தகவலை பெற முடியும். நான் மருத்துவ துறையில் பணியாற்றி இருப்பதால், அங்கு பல மொழிகள் அறிவு அவசியமாகும்.
மருத்துவ தலைநகரமாக விளங்கும் தமிழகத்தில், வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்களுக்கு உள்ள பிரச்னையை புரிய வைக்க, ஹிந்தி மொழி தெரிந்து இருப்பது அவசியமாகும்.
எஸ்.ஆனந்த், ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர், கரூர்: கரூர் மாவட்டத்தில் இருந்து, வீட்டு உபயோக துணி உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய, ஏற்றுமதி நிறுவனங்களில் ஆங்கிலம் மட்டும் தெரிந்தால் போதாது.
ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பிரான்ஸ், ஜெர்மன் உட்பட பல மொழிகள் தெரிந்து இருந்தால், எளிதில் ஆர்டர்களை பெற முடியும். வட மாநிலங்களில் பொருட்கள் விற்பனை செய்யவும், மூலப்பொருட்களை கொள்முதல் செய்யவும், ஹிந்தி மொழி அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.
இங்குள்ளவர்கள் ஹிந்தி மொழியை பேச கற்றுக் கொண்டு விடுகின்றனர். ஆனால், எழுத, படிக்க தெரியாமல் உள்ளனர். இதற்கு முக்கிய காரணம், பள்ளிகளில் நமக்கு மூன்றாவது மொழி கற்கும் வாய்ப்பு இல்லை.
தற்போது, தனியார் பள்ளிகளில் மூன்றாவது மொழி படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை, ஏளிய மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு இல்லை. மூன்றாவது மொழி கற்கவில்லை என்றால், கரூர் போன்ற நகரங்களில் தொழில் முனைவோராக மாறுவது கடினமாகும்.