கோவில் சொத்து அழிக்கும் அரசு ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு
கோவில் சொத்து அழிக்கும் அரசு ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு
ADDED : ஆக 17, 2024 07:10 PM
திருப்பூர்:''கோவில் சொத்துகளை தி.மு.க., அரசு திட்டமிட்டு அழிக்கிறது,'' என, ஹிந்து முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.
மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
சென்னை, அயனாவரம் அகத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 4 ஏக்கர் இடத்தை, மீன் சந்தை கட்டும் நோக்கில், தமிழக அமைச்சர்கள் பார்வையிட்டனர். இதை எதிர்த்து பக்தர்கள் தொடர்ந்த வழக்கை, கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
கோவிலுக்கு சொந்தமான இடங்கள், கோவில் மற்றும் பக்தர்கள் தேவைக்கு பயன்பட வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புக்கு, இது எதிரானது.
கோவில் சொத்தை எந்த வகையில் கபளீகரம் செய்யலாம் என, தி.மு.க., அரசு பதவி ஏற்றதில் இருந்து பலவகையிலும் திட்டம் போடுகிறது. பின், அதை செயல்படுத்தி வருகிறது.
ஆன்மிக பணிக்காகவும், பக்தர்கள் வசதிக்காகவும் மட்டுமே கோவில் சொத்துக்களை பயன்படுத்த வேண்டும். கோவில் சொத்துக்களை பராமரிக்க உயர் நீதிமன்றம் காட்டிய வழிமுறைகளை ஹிந்து அறநிலையத் துறை பின்பற்ற வேண்டும்.
கோவில் இடங்களில் குத்தகை, வாடகை தராமல் ஆக்கிரமித்துள்ளவர்கள் பட்டியல் ஒவ்வொரு கோவில் வாசலிலும் பக்தர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். வசூலாகும் வரை தொடர்ந்து இதேபோல செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

