கசாப்பு கடையில் கோவில் பசுக்கள் ஹிந்து முன்னணி கடும் கண்டனம்
கசாப்பு கடையில் கோவில் பசுக்கள் ஹிந்து முன்னணி கடும் கண்டனம்
ADDED : ஏப் 06, 2024 02:18 AM

திருப்பூர்:'தானமாக வழங்கிய பசுக்களை விற்கும் சுய உதவிக்குழு நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று, ஹிந்து முன்னணி வலியுறுத்திஉள்ளது.
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை:
கோவில்களுக்கு பக்தர்கள் தானமாக வழங்கும் பசுக்களை, கோவில் நிர்வாகத்தினர், மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் வளர்க்க வழங்குகின்றனர். குழுக்களுக்கு வழங்கப்படும் பசுக்கள் எண்ணிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
பெரும்பாலும் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கும் பசுக்கள், இடைத்தரகர்களால் கசாப்பு கடைக்கு விற்கப்படுகின்றன.
இறை நம்பிக்கையுடன் கோவிலுக்கு வழங்கும் பசுக்களை பராமரிக்க முடியாத அளவுக்கு, ஹிந்து சமய அறநிலையத்துறை திறனற்று இருக்கிறது. இது, மன்னிக்க முடியாத குற்றம்.
பசுக்கள் எண்ணிக்கை மற்றும் பெற்றுக் கொள்ளும் சுய உதவிக் குழுக்கள் எண்ணிக்கை, குழுவினர் வைத்துள்ள பசுக்கள் எண்ணிக்கை என விபரங்களை, வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும்.
'கோவிலில் இருந்து தானமாக பெற்ற பசுவை விற்க மாட்டேன்' என, உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்துவிட்டு, பசுக்களை விற்பனை செய்யும் சுய உதவிக்குழு நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

