வீட்டு தோட்ட இடுபொருட்கள் ரூ.900 மதிப்புள்ளவை ரூ.450க்கு!
வீட்டு தோட்ட இடுபொருட்கள் ரூ.900 மதிப்புள்ளவை ரூ.450க்கு!
ADDED : ஆக 22, 2024 01:59 AM
சென்னை:காய்கறிகள் சாகுபடியை அதிகரிக்கும் வகையில், வீட்டு தோட்ட இடுபொருட்களை, மானிய விலையில் விற்கிறது தோட்டக்கலைத் துறை.
ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாடு இல்லாமல், சத்தான காய்கறிகளை வீடுகளிலேயே உற்பத்தி செய்யும், முதல்வரின் வீட்டு தோட்ட திட்டத்தை, தோட்டக்கலைத் துறை செயல்படுத்தி வருகிறது.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் அமலில் உள்ள இத்திட்டம், நடப்பாண்டு மாநிலம் முழுதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், ஆறு செடி வளர்ப்பு பைகள், மண்ணுக்கு மாற்றாக பயன்படுத்த ஆறு கிலோ தென்னை நார் கழிவுகள், கத்தரி, வெண்டை, மிளகாய் உள்ளிட்ட ஆறு வகையான காய்கறி விதைகள், நுண்ணுாட்ட சத்துக்கள், இயற்கை உரங்கள், வேப்ப எண்ணெய் ஆகியவை வழங்கப்படுகின்றன.
ஒரு தொகுப்பின் அடக்க விலை, 900 ரூபாய். இது 50 சதவீத மானியத்தில் 450 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தோட்டக்கலைத் துறையின், www.tnhorticulture.com என்ற இணையதள முகவரியில், இதற்காக முன்பதிவு செய்ய வேண்டும்.
தோட்டக்கலை பண்ணைகள், பூங்காக்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில், ஆதார் அட்டையை காண்பித்து, இடுபொருட்களை பெற்றுக்கொள்ளலாம். ஒருவருக்கு இரண்டு தொகுப்புகள் வரை வழங்கப்படும்.
சென்னையில் செம்மொழி பூங்கா, மாதவரம் செயல் விளக்க பூங்கா, அண்ணாநகர், பெரம்பூர், கே.கே.நகர், திருவான்மியூர் தோட்டக்கலை கிடங்கு ஆகிய இடங்களில் விற்பனை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.