சிதம்பரத்தில் ஹோட்டல் தமிழ்நாடு ரூ.8 கோடியில் கட்டட பணி தீவிரம்
சிதம்பரத்தில் ஹோட்டல் தமிழ்நாடு ரூ.8 கோடியில் கட்டட பணி தீவிரம்
ADDED : பிப் 22, 2025 09:38 PM
சிதம்பரம்:சிதம்பரத்தில் சுற்றுலா துறை சார்பில் கட்டப்பட்டு, பாதியில் நிறுத்தப்பட்ட தமிழ்நாடு ஹோட்டல் பணி, 8 கோடி ரூபாயில் மீண்டும் துவங்கியுள்ளது.
சுற்றுலா நகரமான சிதம்பரத்தில், உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் மற்றும் பிச்சாவரம் வன சுற்றுலா மையம் அமைந்துள்ளது.
கன்னியாகுமரி போன்ற முக்கிய சுற்றுலா நகரங்களில் உள்ளது போல், சிதம்பரத்திலும் தமிழ்நாடு ஹோட்டல் கட்ட முடிவு செய்யப்பட்டு, 2019ம் ஆண்டு, 10 கோடி மதிப்பில், சிதம்பரம் ரயில்வே பீடர் ரோட்டில் புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கியது. இதில், 24 அறைகள், ஹோட்டல் மற்றும் பாருடன் கூடிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
விறுவிறுப்பாக நடந்து வந்த பணிகள், கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டன. கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தால், அதே தொகையில் பணிகளை தொடர முடியாமல் கிடப்பில் போடப்பட்டது.
இதையடுத்து, சிதம்பரத்தில் கட்டப்பட்ட தமிழ்நாடு ஹோட்டல் கட்டடம், பாதி முடிந்த நிலையில், காட்சி பொருளாக மாறியதால், சுற்றுலா பயணியர் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு பின், மீண்டும் ஹோட்டல் கட்டுமான பணியை தொடர, 8 கோடி ரூபாய்க்கு புதிய டெண்டர் விடப்பட்டு தற்போது பணிகள் துவங்கியுள்ளன. எட்டு மாதங்களில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

