அறிவியல்பூர்வ ஆய்வு இல்லாமல் செறிவூட்டிய அரிசி திட்டம் எப்படி? ஐகோர்ட் கேள்வி
அறிவியல்பூர்வ ஆய்வு இல்லாமல் செறிவூட்டிய அரிசி திட்டம் எப்படி? ஐகோர்ட் கேள்வி
ADDED : ஏப் 27, 2024 01:14 AM
சென்னை:அறிவியல்பூர்வ ஆய்வு மேற்கொள்ளாமல், செறிவூட்டப்பட்ட அரிசி வினியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும் என்பதற்கு விளக்கம் அளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செறிவூட்டப்பட்ட அரிசி, மத்திய அரசு திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. பொது வினியோக திட்டத்தின் வாயிலாக, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் அரிசி வினியோகம் துவங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் விதிகளின்படி, தலசிமா நோய் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை பெற்றும், அனிமியா பாதிப்பு உள்ளவர்கள் இதை சாப்பிட வேண்டாம் எனவும், எச்சரிக்கை வாசகம் இடம்பெற வேண்டும்.
எந்த எச்சரிக்கை வாசகமும் இன்றி, அரிசி வினியோகம் நடப்பதாக, சுற்றுச் சூழல் ஆர்வலரான, வழக்கறிஞர் வெற்றிசெல்வன், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த திட்டத்தை செயல்படுத்த தடை கோரி, கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த கனிமொழி மணிமாறன் என்பவரும் வழக்கு தொடர்ந்தார்.
மனுக்கள், தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தன. தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ''செறிவூட்டப்பட்ட அரிசி பயன்படுத்துவது குறித்து, ரேஷன் கடைகளின் முன் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. அதனால், பைகளில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறத் தேவையில்லை,'' என்றார்.
மனுதாரர்கள் தரப்பில், வழக்கறிஞர் சேவியல் அருள்ராஜ் ஆஜராகி, ''எந்த அறிவியல்பூர்வ ஆய்வும் மேற்கொள்ளாமல், செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது,'' என்றார்.
இதையடுத்து, திட்டம் பாராட்டக்கூடியதாக இருந்தாலும், அறிவியல்பூர்வ ஆய்வு மேற்கொள்ளாமல் எப்படி செயல்படுத்தப்படும்; இதை பயன்படுத்தக் கூடாதவர்களை எப்படி கண்காணிப்பீர்கள் என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.
விசாரணையை, ஜூன் 19க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

