தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் வந்தது எப்படி?
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் வந்தது எப்படி?
ADDED : பிப் 24, 2025 05:28 AM

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலரான தடங்கம் சுப்பிரமணியை நீக்கிவிட்டு, புதிய பொறுப்பாளராக பென்னாகரத்தைச் சேர்ந்த தர்மசெல்வனை நியமித்து, பொதுச்செயலர் துரைமுருகன் நேற்று அறிவித்தார்.
தர்மபுரி மாவட்ட தி.மு.க.,வில் ஒருங்கிணைந்த மாவட்ட செயலராக தடங்கம் சுப்பிரமணி, 2013ல் நியமிக்கப்பட்டார். கடந்தாண்டு கிழக்கு, மேற்கு என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன.
இதில் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பாலக்கோடு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு மாவட்ட செயலராக பழனியப்பன் நியமிக்கப்பட்டார்.
தர்மபுரி, பென்னாகரம் தொகுதிகளை உள்ளடக்கிய கிழக்கு மாவட்ட செயலராக தடங்கம் சுப்பிரமணி இருந்தார். கடந்த 2016 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அலை வீசியபோதும் தர்மபுரி தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆனார்.
இந்த நிலையில் கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் மணி, பா.ம.க.,வின் சவுமியாவை விட 21,300 ஓட்டுகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
இதில், சுப்பிரமணி பொறுப்பு வகிக்கும் தர்மபுரி, பென்னாகரம் தொகுதிகளில் பா.ம.க., அதிக ஓட்டு பெற்றது. இது, தி.மு.க., தலைமையின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
கூடவே, மாவட்டத்தில் கட்சி பல கோஷ்டிகளாக செயல்பட தடங்கம் சுப்பிரமணியே காரணம் என, தலைமைக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.
இதையடுத்து, தர்மபுரி மா.செ.,வை மாற்றுவது என முடிவெடுத்த தி.மு.க., தலைமை, மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளராக இருந்த தர்மசெல்வனை, தர்மபுரி மற்றும் பென்னாகரம் தொகுதியை உள்ளடக்கிய கிழக்கு மாவட்டச் செயலராக நியமித்து உள்ளது.

