ADDED : ஜூன் 20, 2024 11:06 PM
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். சாராய வியாபாரியான இவர் மீது, 12க்கும் மேற்பட்ட சாராய வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஒரு முறை தடுப்பு காவல் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு உள்ளார். இருப்பினும், கோவிந்தராஜ் கள்ளத்தனமாக மதுபாட்டில் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தார்.
சங்கராபுரம் அடுத்த சேஷசமுத்திரத்தில் இருவரிடம் இருந்த மெத்தனாலை வாங்கி வந்த கோவிந்தராஜ், தான் வைத்திருந்த சாராயத்தில் அதிக போதைக்காக கலந்து கடந்த, 18ம் தேதி விற்பனை செய்துள்ளார். சரியான விகிதத்தில் தண்ணீர் கலக்காத இந்த சாராயத்தை குடித்ததால், 42 பேர் இறந்துள்ளனர். 105 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
இதையடுத்து, கோவிந்தராஜுவுக்கு மெத்தனால் விற்பனை செய்த இருவர் உட்பட, மொத்தம் நான்கு பேரை போலீசார் பிடித்து, அவர்களுக்கு மெத்தனால் எங்கிருந்து கிடைத்தது; வேறு எந்தெந்த பகுதிக்கு விற்றுள்ளனர் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

