'வழக்குகள் பெருமளவு தேங்கி கிடப்பதற்கு வக்கீல்கள் ஒத்துழைப்பின்மையே காரணம்'
'வழக்குகள் பெருமளவு தேங்கி கிடப்பதற்கு வக்கீல்கள் ஒத்துழைப்பின்மையே காரணம்'
ADDED : ஆக 30, 2024 02:14 AM
சென்னை:அவகாசம் கோராமல், குறித்த நேரத்தில் துறையின் வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்ய, வருமான வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
கோவையை சேர்ந்த, லீலாவதி என்பவர் தாக்கல் செய்த மனு:
கூட்டு குடும்பத்தில் இருந்த சொத்தை விற்பனை செய்தேன். அதற்கு, 57.72 லட்சம் ரூபாய் வரி செலுத்தும்படி, வருமான வரித்துறை கோரியது.
தடை விதியுங்கள்
அதை எதிர்த்து, மேல்முறையீட்டுக்கான ஆணையரிடம் முறையீடு செய்துள்ளேன். தடை கோரி, கோவையில் உள்ள வருமான வரி முதன்மை ஆணையரிடமும் மனுத்தாக்கல் செய்துள்ளேன்.
மனுவை பரிசீலித்த கோவை முதன்மை ஆணையர், கேட்பு தொகையில் 20 சதவீதமாக, 11.54 லட்சம் ரூபாயை செலுத்த உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேல்முறையீட்டு ஆணையர் உத்தரவு பிறப்பிக்கும் வரை, வரி வசூலிக்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் கஷ்டம் கருதி, 20 சதவீத தொகைக்கு பதிலாக, 2.50 லட்சம் ரூபாயை செலுத்தும்படி உத்தரவிடப்படுகிறது. நான்கு வாரங்களில் இந்த தொகையை செலுத்தும்பட்சத்தில், மேல்முறையீட்டு மனுவை முடிவு செய்யும் வரை, வரி வசூலிக்க தடை விதிக்கப்படுகிறது.
அரசு துறைகளின் வழக்கறிஞர்கள் கோருவதால், பதில் மனு தாக்கல் செய்வதற்காக, அவ்வப்போது வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்படுகிறது.
ஒரு வழக்கில், ஏழு முறை தள்ளி வைத்தும், 8வது முறையாக அவகாசம் கேட்டதால், இந்த நீதிமன்றம் அபராதம் விதித்தது.
இந்த வழக்கை பொறுத்தவரை, விசாரணைக்கு எடுக்கப்பட்ட முதல் நாளிலேயே, வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.ராமசாமி, பதில் மனுத்தாக்கல் செய்தார். அவரது முயற்சியை, இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது.
விசாரணையை தள்ளிவைக்க கோராமல், பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். விசாரணையின் முதல் நாளிலேயே, அவரால் பதில் மனுத் தாக்கல் செய்ய முடியும் போது, மற்ற வழக்கறிஞர்களால் ஏன் முடியவில்லை.
நீதிமன்றகளால் தான், வழக்குகள் தேக்கம் அடைவதாக பொது மக்கள் கருதுகின்றனர். ஆனால், இரு தரப்பிலும் வாதங்களை வைக்கும் நிலையில், வழக்கை பைசல் செய்ய, நீதிமன்றங்கள் முயற்சிகள் எடுக்கின்றன.
ஏற்க முடியாது
பெரும்பாலான வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கு, பதில் மனுத்தாக்கல் செய்யாமல் இருப்பதும், அதிகாரிகள் மற்றும் துறை வழக்கறிஞர்களின் ஒத்துழைப்பின்மையுமே காரணம்.
குறித்த நேரத்தில் பதில் மனுத்தாக்கல் செய்யாமல் இருப்பதை ஏற்க முடியாது. துறை வழக்கறிஞர்கள், பதில் மனுத்தாக்கல் செய்து, அவகாசம் கோராமல் வாதங்களை முன்வைக்க தயாராக இருக்க வேண்டும்.
அதனால், நீதிமன்றத்தின் நேரம் மிச்சமாவது மட்டுமின்றி, அதிக எண்ணிக்கையில் வழக்குகளும் பைசல் செய்யப்படும்.
எனவே, வருமான வரித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவகாசம் கோராமல், குறித்த நேரத்தில் பதில் மனுத் தாக்கல் செய்வதற்கு, துறை வழக்கறிஞர்களுக்கு ஒத்துழைப்பும் அளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.