கரும்பு பயிரை சேதப்படுத்திய எஸ்.ஐ.,க்கு ரூ.1 லட்சம் அபராதம்; மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
கரும்பு பயிரை சேதப்படுத்திய எஸ்.ஐ.,க்கு ரூ.1 லட்சம் அபராதம்; மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
ADDED : மார் 02, 2025 02:54 AM

சென்னை : கள்ளக்குறிச்சியில் கரும்பு பயிரை சேதப்படுத்திய, சப் - -இன்ஸ்பெக்டருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டை தாலுகா, வடமாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கனகவல்லி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில், 2021ல் தாக்கல் செய்த மனு:
கடந்த 2021ல் எங்களுக்கும், எங்கள் கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன், சாமிக்கண்ணுவுக்கும் இடையே நிலம் தொடர்பாக பிரச்னை இருந்தது. இதனால் விஸ்வநாதனுக்கும், எங்களுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. திருநாவலுார் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். அதை சிறப்பு எஸ்.ஐ., முத்துக்குமரன் விசாரித்து வந்தார். எதிர்தரப்பினருடன் சம்பவ இடத்துக்கு வந்த முத்துக்குமரன், என் கணவர் தெய்வநாயகத்தை தாக்கினார்.
அவரது காலில் விழுந்து, நான் கெஞ்சியபோதும் அவதுாறாக பேசினார். மறுநாள் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும், கைது செய்யப் போவதாகவும் மிரட்டினார்.
அதைத் தொடர்ந்து, 15 பேருடன் வந்த முத்துக்குமரன், எங்களின் 1 ஏக்கர் 40 சென்ட் நிலத்தில் பயிரிட்டிருந்த கரும்பு பயிரை, டிராக்டரை ஏற்றி சேதப்படுத்தினார். சட்டத்தை மீறி அத்துமீறலில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவு:
சாட்சியம் மற்றும் ஆவணங்களை பார்க்கும் போது, சிறப்பு சப்- - இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது. எனவே, மனுதாரர் கனகவல்லிக்கு, தமிழக அரசு 1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
இந்த தொகையை முத்துக்குமரனிடம் இருந்து, தமிழக அரசு வசூலித்துக் கொள்ளலாம். அத்துமீறலில் ஈடுபட்ட முத்துக்குமரன் மீது, அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.