நயவஞ்சகம் வெற்றி பெறாது பன்னீர்செல்வம் கொந்தளிப்பு
நயவஞ்சகம் வெற்றி பெறாது பன்னீர்செல்வம் கொந்தளிப்பு
ADDED : பிப் 25, 2025 09:49 PM
சென்னை:'துரோகம் நிச்சயம் வீழும்; நயவஞ்சகம் நசுக்கப்படும். பொறுத்தார் பூமியாழ்வார்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சேர்க்கப்பட மாட்டார்கள் என தெரிவித்திருந்தார்.
அதற்கு பதில் அளிக்கும் வகையில், பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை:
ஒரு விதை வளருகிறது என, சொன்னால், அங்கு சத்தமிருக்காது. ஆனால், மரம் விழுகிறது என்றால், பலத்த சத்தம் இருக்கும். சத்தம் எங்கு இருக்கிறது என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அது அழிவுப்பாதையை நோக்கி செல்கிறது. வீழ்ச்சியை நோக்கி விரைந்து சென்று கொண்டிருக்கிறது. அது ஒரு மூழ்கும் கப்பல். அந்த கப்பலில் யாரும் ஏறமாட்டார்கள்.
எப்படிப்பட்ட பாவத்தை செய்தவருக்கும், அதிலிருந்து தப்பிக்க வழி உண்டு. செய்நன்றி மறந்த பாவத்திலிருந்து விடுபட வேறு மார்க்கம் இல்லை. எனவே, அழிவிலிருந்து தப்பிப்பது என்பது அறவே இயலாத ஒன்று.
பொறுத்தார் பூமியாள்வார் என சொல்வர். எனவே, 2026ம் ஆண்டு மே மாதம் வரை பொறுத்திருங்கள். தமிழக பூமியை ஆளப்போவது யார் என்பது தெரியும். நன்றி கெட்டவர்ள் துாக்கி எறியப்படுவர். துரோகம் நிச்சயம் வீழும். நயவஞ்சகம் நசுக்கப்படும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், கருவாடு மீனாகாது, கறந்தபால் மடி புகாது. நயவஞ்சகம் வெற்றி பெறாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.