நான் செத்துட்டேன்; தொகுதி காலியாக இருக்கு தி.மு.க., - எம்.எல்.ஏ., அறிவிப்பால் அதிர்ச்சி
நான் செத்துட்டேன்; தொகுதி காலியாக இருக்கு தி.மு.க., - எம்.எல்.ஏ., அறிவிப்பால் அதிர்ச்சி
ADDED : ஜூன் 15, 2024 10:44 PM

திருச்சி:'லால்குடி சட்டசபை உறுப்பினர் சவுந்தரபாண்டியன் இயற்கை எய்தி விட்டதால், தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது' என்று, தன்னைப் பற்றி தி.மு.க., எம்.எல்.ஏ., முகநுாலில் பதிவிட்டுள்ளார். அது, தி.மு.க., வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, திருச்சி தி.மு.க.,வினர் கூறியதாவது:
திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதி எம்.எல்.ஏ.,வாக தி.மு.க.,வைச் சேர்ந்த சவுந்தரபாண்டியன் உள்ளார். இவர் தொகுதியில் தொடர்ச்சியாக 4 முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.
எதிர்பார்ப்பு
கடந்த 2021ல் நான்காவது முறையாக வெற்றி பெற்றதும், தி.மு.க., அமைச்சரவையில் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார்; கிடைக்கவில்லை.
அதற்கு லோக்கல் அமைச்சர் கே.என்.நேருதான் காரணம் என எண்ணினார். பின், கட்சியில் திருச்சி மத்திய மாவட்ட செயலர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். அதுவும் கிடைக்கவில்லை.
தன்னுடைய ஆதரவாளரான வைரமணியை கட்சிப் பதவிக்கு, நேரு கொண்டு வந்து விட்டதால், சவுந்தரபாண்டியனுக்கு மா.செ., பதவி கிடைக்காமல் போனது. இதையடுத்து, கட்சி நிகழ்ச்சிகளிலும், அரசு நிகழ்ச்சிகளிலும் சவுந்தரபாண்டியன் புறக்கணிக்கப்பட்டார்.
அமைச்சர் உதயநிதி லால்குடிக்கு வருகை தந்தபோது கூட அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட வில்லை. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சவுந்தரபாண்டியன், தன்னுடைய எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதாக கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பினார்.
சமாதானம்
இதையடுத்து எம்.எல்.ஏ., சவுந்தரபாண்டியன் உள்ளிட்ட, அதிருப்தியில் இருக்கும் திருச்சி மாவட்ட தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை சமாதானப்படுத்த கட்சித் தலைமை உத்தரவிட்டது.
உடனே ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ., பழனியாண்டி, லால்குடி எம்.எல்.ஏ., சவுந்தரபாண்டியன், துறையூர் எம்.எல்.ஏ., ஸ்டாலின் குமார், மண்ணச்சநல்லுார் எம்.எல்.ஏ., கதிரவன் ஆகியோரை அழைத்துப் பேசிய அமைச்சர் நேரு, அவர்களை சமாதானப்படுத்தினார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் தாசில்தார் அலுவலகம், கருவூல அலுவலகம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்வதற்காக மாவட்ட கலெக்டர் பிரதீப்குமாருடன் அமைச்சர் நேரு லால்குடிக்கு வந்தார். சில இடங்களை பார்வையிட்டனர்.
இது தொடர்பாக லால்குடி எம்.எல்.ஏ.,வான சவுந்தரபாண்டியனுக்கு தகவல் தெரிவிக்கப்பட வில்லை. இதனால் அவர், அமைச்சர் நேரு மீது கடும் அதிருப்தியடைந்தார்.
இந்நிலையில், லால்குடியில் அரசு அலுவலகங்கள் கட்டுவதற்காக தான் பார்வையிட்ட இடங்கள் குறித்த தகவல்களை படங்களுடன், தன்னுடைய முகநுால் பக்கத்தில் பதிவிட்டார் அமைச்சர் நேரு.
இதையறிந்ததும் கோபமான லால்குடி எம்.எல்.ஏ., சவுந்தரபாண்டியன், அமைச்சர் நேருவின் பதிவுக்குக் கீழே, 'லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரபாண்டியன் இயற்கை எய்தி விட்டதால், லால்குடி தொகுதி காலியான இடமாக அறிவிக்கப்பட்டது' என்று பதிலுக்கு பதிவிட்டு விட்டார்.
இத்தகவல் தலைமைக்குச் சென்றது. உடனே, அறிவாலயத்தில் இருந்து சிலர் சவுந்தரபாண்டியனை தொடர்பு கொண்டு பேசினர். அதன்பின், தன்னுடைய பதிவை அவர் நீக்கி விட்டார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

