'அடுத்த தலைமுறை சரியில்லை என்று கூறுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை'
'அடுத்த தலைமுறை சரியில்லை என்று கூறுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை'
ADDED : மே 24, 2024 04:35 AM

சென்னை : ''அடுத்த தலைமுறையினர் சரியில்லை என்று கூறுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை,'' என, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா பேசினார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா. நேற்றுடன் ஓய்வு பெறும் இவருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் சார்பில் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.
தீர்ப்புகள்
நிகழ்ச்சியில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் பேசியதாவது: தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, மே மாதத்தில் பிறந்தவர். தற்போது, மே மாதத்திலேயே ஓய்வு பெறுகிறார். ராஜராஜ சோழன் போல வந்து, தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார்.
ராஜராஜ சோழன், ராஜ்ஜியங்களை வெற்றி கண்டார். ஆனால், தலைமை நீதிபதி, நம் மனதை வெற்றி கொண்டுள்ளார். அறிவு, பொறுமை, நேர்மை தவிர, தலைமை நீதிபதியின் சக்தி, ஆர்வம், நீண்ட நேரம் வழக்குகளை விசாரித்தது பிரமிப்பை உண்டாக்கியது.
கடந்த 14 ஆண்டுகள் இரண்டு மாதங்களில், ஏழு நாட்கள் மட்டுமே விடுப்பு எடுத்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வரும் முன், 85,090 வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார். சட்ட இதழ்களில், 400 தீர்ப்புகள் வரை இடம்பெற்றுள்ளன.
சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்த 11 மாதத்தில், சென்னையில் 13,015, மதுரையில் 1,574 வழக்குகளுக்கு தீர்ப்பளித்துள்ளார். மொத்தமாக, 99, 949 வழக்குகள் தீர்ப்பளித்துள்ளார்.
திருப்தி
இன்னும் 51 வழக்குகளில் தீர்ப்பு வழங்கியிருந்தால், ஒரு லட்சம் வழக்குகளில் தீர்ப்பு வழங்கியவர் என்ற பெருமையை பெற்றிருக்க முடியும். பணி காலத்தில், நீதித்துறையில் பல்வேறு அதிசயங்களை நிகழ்த்தி உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
'மாலை வணக்கம்' என்று தமிழில் கூறி ஏற்புரையாற்றிய தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா பேசியதாவது:
மருத்துவம் படிக்க இடம் கிடைக்காததால், வழக்கறிஞரானேன். 20 ஆண்டுகளாக, பல்வேறு சட்ட கல்லுாரிகளில், வகுப்புகளை நடத்தி உள்ளேன்.
என் மாணவர்களில் பலர் நீதித்துறையில் பல முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். இருவர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக உள்ளனர்.
சென்னை வந்து இறங்கிய போது, மூத்த நீதிபதிகள் வந்து வரவேற்றது, சொந்த வீடாக கருதும் வகையில் இருந்தது.
அன்பானவர்கள் அருகில் அதிக காலம் இருந்தாலும், அது குறைவாகவே தெரியும் என்பது போல, ஓராண்டு பணியாற்றினாலும், உங்களின் அன்பால் அது ஒரு நாளை போலவே இருந்தது.
பல சட்டங்களை வகுக்க முக்கிய பங்கு வகித்த சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றியது மிகுந்த திருப்தி. வழக்கறிஞர்களின் வாதங்கள் சில நேரங்களில் இசையாக இருந்ததால் தான், அதிக நேரம் வழக்குகளை விசாரிக்க முடிந்தது.
சிறப்பான இடம்
இளம் வழக்கறிஞர்கள் மீது, அதிக நம்பிக்கை உள்ளது. அடுத்த தலைமுறையினர் சரியில்லை என்று கூறுவதில், எனக்கு நம்பிக்கை இல்லை. ஒவ்வொரு தலைமுறையும் சட்டத்துக்கு பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
பல தலைமை நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்களை வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற மரபை, இளம் வழக்கறிஞர்கள் தொடர்ந்து கொண்டு செல்வர்.
கடினமாக, நேர்மையாக உழைத்தால் சிறப்பான இடத்தை பிடிக்கலாம். ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.