UPDATED : மே 30, 2024 07:39 AM
ADDED : மே 30, 2024 02:28 AM

சென்னை: ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவின் இடது தோளில் எலும்புகள் உடைந்திருந்ததால், அதை சரிசெய்ய, 'டைட்டானியம் பிளேட்' வைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வைகோ மகனும், ம.தி.மு.க., முதன்மைச் செயலருமான துரை அறிக்கை: வைகோவுக்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. அவர் நலமுடன் இருப்பதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். வைகோவின் இடது தோளில் மூன்று இடத்தில் எலும்புகள் உடைந்திருந்தன. தற்போது அதை சரி செய்ய, 'டைட்டானியம் பிளேட்' வைத்திருக்கின்றனர். 40 நாட்கள் ஓய்வுக்கு பின், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தோள்பட்டை சரியாகி, இயல்பு நிலைக்கு வந்து விடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பூரண நலத்தோடு வருவேன்
வைகோ வெளியிட்டு உள்ள வீடியோ பதிவு: தமிழகத்தில் பொது ஊழியம் செய்கிற சாதாரண தொண்டனாகிய இந்த வைகோ, இதுவரை 7,000 கி.மீ., நடந்திருக்கிறேன்; ஆனால், கீழே விழுந்ததில்லை. திருநெல்வேலியில் தங்கி இருந்த வீட்டில் படிகளின் வழியாக ஏறாமல், பக்கத்தில் இருந்த திண்ணையில் ஏறினேன். அப்போது நிலை தடுமாறி விழுந்து விட்டேன்.
தலையிலோ, முதுகெலும்பிலோ அடிப்பட்டிருந்தால், நான் இயங்க முடியாமல் போயிருக்கும். நல்ல வேளையாக, இடது தோள்பட்டை எலும்பு 2 செ.மீ., உடைந்துள்ளது. நான் நன்றாக இருக்கிறேன். முன்பு போன்று இயங்க முடியுமா என, யாரும் சந்தேகம்பட வேண்டாம். முழு ஆரோக்கியத்தோடு வருவேன்; எனக்காக கவலைப்படும் உள்ளங்களுக்கு நன்றி. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.