வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன்: நீதிமன்ற வாயிலில் பழனிசாமி பேட்டி
வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன்: நீதிமன்ற வாயிலில் பழனிசாமி பேட்டி
ADDED : ஆக 28, 2024 05:15 AM

சென்னை : தி.மு.க., - எம்.பி., தயாநிதி தொடர்ந்த அவதுாறு வழக்கில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். பின், ''வழக்கை எதிர்கொள்ள தயாராக உள்ளேன்,'' என, அவர் தெரிவித்தார்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, கடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, 'மத்திய சென்னை தி.மு.க., - எம்.பி., தயாநிதி, தன் தொகுதி மேம்பாட்டு நிதியில், 75 சதவீதத்தை செலவு செய்யவில்லை.
'அப்படி என்றால், அவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை, மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்' என்று பேசினார்.
'பழனிசாமியின் பேச்சு, தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது' என, பழனிசாமி மீது தயாநிதி, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.
பின், இந்த வழக்கு, சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு, கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, பழனிசாமி ஆஜரானார். அவரிடம், 'வழக்கு குறித்து உங்களுக்கு தெரியுமா' எனக் கேட்ட நீதிபதி, அதுகுறித்து விவரித்தார்.
அதையடுத்து, ''என் மீதான குற்றச்சாட்டை மறுக்கிறேன். இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்,'' என, நீதிபதியிடம் பழனிசாமி தெரிவித்தார்.
இதைப் பதிவுசெய்த நீதிபதி, வழக்கு விசாரணையை செப்., 19க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
விலக்கு கோரி மனு
வயது மூப்பு மற்றும் உடல் நலம் கருதி, இந்த வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு கோரி, பழனிசாமி தரப்பில், அவரது வழக்கறிஞர் அய்யப்பராஜ் மனு தாக்கல் செய்தார்.
மனு மீதான உத்தரவு வழங்காமல், வழக்கை நீதிபதி தள்ளி வைத்தார்.