'யாரையும் அவதுாறாக பேசமாட்டேன்' 'சாட்டை' துரைமுருகன் உத்தரவாதம்
'யாரையும் அவதுாறாக பேசமாட்டேன்' 'சாட்டை' துரைமுருகன் உத்தரவாதம்
ADDED : ஆக 01, 2024 11:06 PM
மதுரை:'வரும் காலங்களில் யாரையும் அவதுாறாக பேசமாட்டேன்' என நாம் தமிழர் கட்சி நிர்வாகி 'சாட்டை' துரைமுருகன் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் உத்தரவாதம் தாக்கல் செய்யப்பட்டது.
விக்கிரவாண்டி சட்டசபை இடைத் தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிட்டார். அவரை ஆதரித்து அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலர் 'சாட்டை' துரைமுருகன் பிரசாரம் செய்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தமிழக அரசு குறித்து அவதுாறாக பேசி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாக திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர் அருண் திருச்சி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதியப்பட்டது.
'சாட்டை' துரைமுருகன், 'திருச்சி வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் சரணடைந்தால் அதை ஏற்று அன்றே ஜாமின் மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட வேண்டும்' என உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.நீதிபதி பி.புகழேந்தி: மனுதாரர் ஏற்கனவே ஒரு வழக்கில் வரும்காலங்களில் யாரையும் அவதுாறாக பேசமாட்டேன் என இந்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளார். அதை தற்போது மீறியுள்ளார்.
மனுதாரர் வரும்காலங்களில் யாரையும் அவதுாறாக பேசமாட்டேன் என உத்தரவாதம் தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி விசாரணையை சில மணிநேரம் ஒத்திவைத்தார். பின் மனுதாரர் தரப்பில் உத்தரவாதம் தாக்கல் செய்யப்பட்டது.இதை ஏற்ற நீதிபதி: மனுதாரர் கீழமை நீதிமன்றத்தில் சரணடைந்தால் ஜாமின் மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மனு அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.